August 9, 2018
தண்டோரா குழு
மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்ட நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தினர்.
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும்,முன்னாள் முதல்வரும்,திமுக தலைவருமான கருணாநிதி கடந்த (ஆக 7)ம் தேதி மாலை காலமானார்.பின்னர் ராஜாஜி ஹாலில் பொது மக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது.அங்கு,பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும்,திரையுலகினரும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.
இதனைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் கருணாநிதியின் உடல் கொண்டு வரப்பட்டது.பின்னர் முப்படை வீரர்கள் கருணாநிதியின் உடலை எடுத்து வந்து இறுதி மரியாதை செய்தனர்.
இதனையடுத்து,குடும்பத்தினர் கண்ணீருடன் இறுதி அஞ்சலி செலுத்தினர்.பின்,21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.இதன் பின்னர் அவரின் உடல் சந்தன பேழையில் வைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
சென்னையில் நேற்று பெய்த கனமழையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பொது மக்களும்,கட்சி தொண்டர்களும் இரவு முழுவதும் கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து 2வது நாளாக இன்றும் காலை முதல் கருணாநிதி நினைவிடத்தில் ஏராளமான மக்கள் குவிந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இந்நிலையில் இன்று(ஆகஸ்ட் 9)காலை திமுக தலைவர் கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்ட நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தினர்.