August 11, 2018
தண்டோரா குழு
திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி அவர் வெற்றி பெற்ற திருவாரூர் தொகுதி காலியாக இருப்பதால் இடைத்தேர்தல் நடத்த அறிவிப்பு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
திமுக தலைவரும்,முன்னாள் முதல்வருமான கருணாநிதி,கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திருவாரூர் தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார்.இந்நிலையில் கருணாநிதி கடந்த 7-ம் தேதி மரணமடைந்தார்.இதனைத் தொடர்ந்து அவரது மறைவு குறித்த தகவல் சட்டசபை செயலகத்திற்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து கருணாநிதி போட்டியிட்டு வெற்றி பெற்ற திருவாரூர் தொகுதி காலியாக உள்ளதாக சபாநாயகர் தனபால் நேற்று (ஆகஸ்ட் 10) அறிவிப்பு ஆணை வெளியிட்டார்.இந்த அறிவிப்பு ஆணை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆகையால்,அந்த தேதியில் இருந்து அடுத்த 6 மாத காலத்திற்குள் திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்,அதற்கான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் இனி மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதைப்போல் அண்மையில் அதிமுக எம்எல்ஏ. ஏ.கே. போஸ் மறைவை தொடர்ந்து திருப்பரங்குன்றம் தொகுதியும் காலியாக உள்ளதாக அறிவிப்பு ஆணை வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.