August 7, 2018
தண்டோரா குழு
கலைஞர் உடலை அடக்கம் செய்ய அண்ணா நினைவிட வளாகத்திற்குள் இடம் ஒதுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார். அவருடைய மறைவுக்கு பிரதமர்,குடியரசுத் தலைவர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மெரினாவில் அடக்கம் செய்வதற்கு அனுமதி கேட்டனர்.இந்தக் கோரிக்கையை பரிசீலிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில்,நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய இடம் ஒதுக்க இயல்வில்லை என்றும்,காமராஜர் நினைவகத்துக்கு அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்க அரசு தயாராக உள்ளது எனதமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில்,திமுக செயல் தலைவர் வெளியிட்ட அறிக்கையில்,
80 ஆண்டு கால பொதுவாழ்வுக்கு சொந்தக்காரரான கருணாநிதிக்கு உரிய மரியாதையுடனும், அரசியல் ரீதியாக அவருக்குள்ள தார்மீக உரிமையின் அடிப்படையிலும் தமிழக அரசு மெரினாவில் அனுமதி வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.