August 8, 2018
தண்டோரா குழு
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும்,முன்னாள் முதல்வரும்,திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக்குறைவால் நேற்று மாலை காலமானார்.இதையடுத்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கபட்டுள்ளது.அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகரும் திமுக தலைவர் மு.கருணாநிதியின் உறவினருமான விக்ரம்,தற்போது வெளியூரில் இருப்பதால்,கருணாநிதியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியாத சூழ்நிலையில்,அவர் கடிதம் மூலம் கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
“தமிழின தலைவர், முத்தமிழ் அறிஞர், இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்,ஐந்து முறை தமிழக முதல்வர் என பன்முக ஆளுமைக் கொண்ட டாக்டர்.கலைஞர் ஐயா அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.
தற்போது வெளியூரில் இருப்பதால் நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியாத சூழலில் இருக்கிறேன்.அவருடைய பிரிவால் வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும்,கோடி கணக்கான தமிழர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.