August 13, 2018
தண்டோரா குழு
வானிலையில் மட்டுமின்றி திமுகவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதாக அதிமுக செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைருமான கருணாநிதி ஆகஸ்ட் 7ம் தேதி மாலை காவேரி மருத்துவமனையில் காலமானார்.பின்னர் அரசு மரியாதையுடன் கருணாநிதியின் உடல் அண்ணா சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.
கருணாநிதியின் மறைவுக்கு பின் நாளை திமுக செயற்குழு கூட்டம் முதல்முறையாக நடைபெற உள்ளது.இதில் திமுக கட்சியின் நிர்வாக அமைப்பில் மாற்றம் செய்யப்படுவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து,கருணாநிதியின் நினைவிடத்தில் மு.க.அழகிரி தனது குடும்பத்தினருடன் இன்று அஞ்சலி செலுத்தினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,”எனது தந்தையிடம் எனது ஆதங்கத்தை வேண்டிக் கொண்டேன்;அது இப்போது தெரியாது.கருணாநிதியின் அனைத்து விசுவாசிகளும் என்பக்கமே உள்ளார்கள் இதற்கு காலம் பதில் சொல்லும் என்றார்.
இந்நிலையில் இதுகுறித்து அதிமுக செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வன் கூறுகையில், வானிலையில் மட்டுமின்றி திமுகவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. திமுகவில் உருவாகியுள்ள புயலுக்கு ‘அழகிரி’ என்று பெயர் வைக்கலாம் என்று கூறியுள்ளார்.