August 11, 2018
தண்டோரா குழு
வாகன சோதனையின்போது ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு சான்றிதழ் உள்ளிட்டவற்றை மின்னணு (டிஜிட்டல்) முறையிலும் காண்பிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தனி மனிதரின் ஆவணங்களைப் பாதுகாக்க டிஜிட்டல் லாக்கர் முறையை மத்திய அரசு ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளது.இதில் ஆதார் ஆட்டை, வங்கி கணக்கு உள்ளிட்ட முக்கிய ஆவணங்களைச் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.தேவைப்படும் நேரங்களில் அதைப் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
அதேபோன்று,வாகன ஓட்டுநர் உரிமம் தொடர்பாக டிஜிலாக்கர் எம்பரிவாகன் (mparivahan app) என்ற மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.இதில் வாகன ஒட்டுநர் உள்ளிட்ட ஆவணங்களைச் சேமித்து வைத்து,தேவைப்படும்போது காவல் துறை உள்ளிட்ட அரசுத் துறைப் பணியாளர்களிடம் காண்பிக்கலாம்.
ஆனால்,பல இடங்களில் போக்குவரத்து போலீஸார் அதனை ஏற்றுக்கொள்வதில்லை எனத் தெரிகிறது.இதையடுத்து இதுதொடர்பாக பல்வேறு புகார்கள் மத்திய அரசுக்கு வந்தன. இதுதொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சகம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
அதில் டிஜிலாக்கர்,எம்-பரிவாஹன் மூலமாக காண்பிக்கப்படும் ஆவணங்களை அசல் ஆவணங்களைப் போன்றே அதிகாரிகள் கருத வேண்டும்.அதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.