August 14, 2018
தண்டோரா குழு
திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி கூறிய கருத்துக்கு தயாநிதி அழகிரி கருத்து தெரிவித்து உள்ளார்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் நேற்று அஞ்சலி செலுத்திய பின் முன்னாள் மத்திய அமைச்சரும் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி கலைஞரின் உண்மையான தொண்டர்கள் என் பக்கம் உள்ளனர் என்று கூறிய கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில்,மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடம் நோக்கி திராவிடர் கழகத்தின் சார்பில் அமைதிப்பேரணி அக்கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் இன்று நடைபெற்றது. கி.வீரமணி மலர்வளையம் வைத்து கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“கருணாநிதி என்பவர் ஒரு தனி மனிதரல்ல.மாறாக,திராவிட இயக்கத்தினுடைய மூன்றாவது அத்தியாயம்.நான்காவது அத்தியாயம் தொடர வேண்டும்.திமுகவுக்கு தாய்க்கழகம் எப்பொழுதும் கவசமாக இருக்கும்.திராவிடர் கழகம் கேடயமாக இருக்கவேண்டிய நேரத்தில்,கேடயமாக இருக்கும்; வாளாகச் சுழலவேண்டிய நேரத்தில் வாளாகச் சுழலும்.
அண்ணாவின் மறைவுக்குப் பின்னால்,கருணாநிதியின் தலைமை எவ்வளவு ஆற்றல் மிகுந்த தலைமை,அரை நூற்றாண்டு கால தலைமை என்பதை நிரூபித்தார்களோ,அதைப்போல, கட்டுக்கோப்பாக,கட்டுப்பாடு மிக்க ஒரு சிறப்பான இயக்கமாக திமுக தொடர்ந்து நடைபோட தாய்க்கழகம் என்றும் துணை நிற்கும்” என்றார்.
அப்போது,ஸ்டாலின் திமுக தலைவரானால் கருணாநிதியின் பணிகள் தொடருமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு,கருணாநிதி யாரை அடையாளப்படுத்தினாரோ,எது தொடர வேண்டும் என்று அவர் வாழ்ந்த காலத்திலேயே நினைத்தாரோ,அதைத் தொடர வைக்கக்கூடிய பக்குவமும்,கட்டுப்பாடும் திமுக தோழர்களுக்கும் பொறுப்பாளர்களுக்கும் உண்டு என்று நாம் உறுதியாக நம்புகிறோம் என்றார்.
மேலும்,மு.க அழகிரி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது,வீட்டிற்குள் இருப்பவர்களைப் பற்றிக் கேளுங்கள்;அவர்கள் விருந்து சாப்பிடவேண்டும் என்று வெளியே இருப்பவர்கள் சொன்னால், அதற்குப் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை என வீரமணி தெரிவித்தார்.
இந்நிலையில்,வீரமணியின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில்,மு.க அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி தனது டுவிட்டர் பக்கத்தில்,”காலம் காலமாக தி.மு.க விலும்,அ.தி.மு.க விலும், ஓசி சோறு உண்ணும் ஐயா கி.வீரமணி அவர்கள் இதை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கின்றேன்” எனக் கூறியுள்ளார்.