July 26, 2018
தண்டோரா குழு
கோவை இடையர்பாளையம் பகுதியில் நீண்ட நாட்களுக்கு மேலாக சாலை பராமரிப்பு பணிகளால் நடப்பதால் மக்கள் தினமும் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு ஆளாகி வருகின்றனர்.
கோவை வடவள்ளி,தடாகம்,ஆனைக்கட்டி,துடியலூர்,கவுண்டபாளையம் போகும் அனைத்து வழிகளை இணைக்கும் முக்கிய சாலையாக இடையர்பாளையம் உள்ளது.இந்த சாலை வழியாக இரு சக்கர வாகனங்கள்,பள்ளி வாகனம்,ஆம்புலன்ஸ்,லாரிகள் என நாள்தோறும் நூற்றுக்கும் மேலான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில்,இங்குள்ள நான்கு முனை சிக்னல் ரோடில் சாலை பராமரிப்பு வேலைகள் நீண்ட நாட்களாக நடந்து வருகிறது.இங்கு சுற்றியுள்ள பகுதியில் கிட்டதட்ட ஒரு வருடங்களுக்கும் மேலாக இப்பணிகள் தொடர்ந்து நடைப்பெறுவதால் மக்கள் தினமும் கடும்போக்குவரத்துக்கு அவதிக்குள்ளாகி வருகின்றனர்.மேலும்,சாலை பராமரிப்பு காரணமாக அங்குள்ள சிக்னலையும் அகற்றி விட்டனர்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த முஹம்மது கூறுகையில்,
“கடந்த ஓர் ஆண்டாக இங்கு சாலைகளை தோண்டுவதும்,மூடுவதுமாகவே உள்ளனர்.முறையாக சாலை பராமரிப்பு வேலைகள் நடப்பது இல்லை.இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.எங்கு பார்த்தாலும் மேடு பள்ளமாக காட்சியளிக்கிறது.குறிப்பாக மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக பயன்படுத்தவே முடியாத சாலையாக இது மாறிவிடுகிறது. இச்சாலையை கடந்து செல்ல மிகுந்த சிரமப்படவேண்டியுள்ளது”.என்றார்.
இதுகுறித்து அங்குள்ள பொதுமக்கள் கூறுகையில்,
“இந்த சாலை தார்க்கலவையைப் பார்த்தே பல ஆண்டுகளுக்கு மேலாகிறது.இதனால் நாங்கள் படும் துன்பம் சொல்லி மாளாது.உயரதிகாரிகள் நேரில் வந்து பார்த்தால் தான் பிரச்சினையின் தீவிரம் புரியும்.இங்கு பள்ளிகள்,மருத்துவமனை அதிக அளவில் உள்ளதால் பள்ளி செல்ல மாணவர்களும் மக்களும் தினசரி கஷ்டப்படுகின்றனர்.தினமும் இங்கு உள்ள பள்ளத்தில் எதாவது ஒரு வண்டிகள் சிக்கி கொள்கிறது.எங்களுக்கு ஸ்மார்ட் சிட்டி,மாடர்ன் ரோடு ஏதும் எங்களுக்கு தேவையில்லை நாங்கள் போய் வர நல்ல ரோடு இருந்தால் அதுவே போதும் என்கின்றனர்”.