September 29, 2018
ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழலை கண்டித்தும்,அதன் மீது விசாரணை நடத்தக் கோரியும் கோவை மாவட்ட மாணவர் காங்கிரஸ் சார்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய பாரதிய ஜனதா அரசு பிரெஞ்சு அரசுடன் செய்துள்ள ரபேல் விமான ஒப்பந்தத்தில் முறைகேடும் ஊழலும் நடந்திருப்பதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
ரபேல் விமான ஒப்பந்தம் ஊழலை கண்டித்தும்,அதன் மீது விசாரணை நடத்தக்கோரியும் காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் கோவையில் மாணவர் காங்கிரசார் சார்பாக தெற்கு தாலூகா அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாணவர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இதில் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் கல்யாண் குமார் முன்னிலை வகித்தார்.இதில் காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் V.M.C.மனோகரன் கலந்து கொண்டு பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் தற்போதைய பெட்ரோல் டீசல் விலை உயர்வு,ஜி.எஸ்.டி வரி விதிப்பு போன்ற மக்கள் விரோத கொள்கையை கண்டித்து கண்டன கோசங்கள் எழுப்பப்பட்டன.