August 22, 2018
தண்டோரா குழு
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும்,முன்னாள் மத்திய அமைச்சருமான குருதாஸ் காமத்(63) இன்று காலமானார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஒருவரான குருதாஸ் காமத்(63)மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர்.டெல்லியில் உள்ள அலுவலகத்தில் இருந்தபோது இன்று காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து அவரை சாணக்யபுரியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் உயிர் பிரிந்தது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனைக்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.மேலும் குருதாஸ் காமத் மறைவுக்கு முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி,மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்,காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மறைந்த குருதாஸ் காமத் 1984,1991,1998,2008 ஆகிய ஆண்டுகளில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இவர்,2009 முதல் 2011 வரை உள்துறை இணை அமைச்சராகவும்,தகவல் தொழில்நுட்ப அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.