• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் – ஸ்டாலின்

November 3, 2016 தண்டோரா குழு

மவுலிவாக்கம் கட்டடம் இடிக்கப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் திமுக பொருளாளருமான
மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினார்.

இது தொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சென்னை, மவுலிவாக்கத்தில் 11 மாடிக் கட்டடம் 2014 ஆம் ஆண்டு ஜூன் 28ம் தேதி திடீரென்று இடிந்து விழுந்தது. அதில், 61 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் சென்னை மாநகரையே உலுக்கியது.

சம்பவம் நடந்த பின் ஆகஸ்ட் 4 ஆம் தேதி மவுலிவாக்கம் கட்டட விபத்து குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நான் பொதுநல வழக்கு தொடர்ந்தேன். அதே நேரத்தில், இடிந்து விழுந்த கட்டடத்திற்கு அருகில் உள்ள, நேற்று இடிக்கப்பட்ட ஆபத்தான அடுக்கு மாடி கட்டடத்தையும் இடிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடுகள் வழங்க வேண்டும் என்றும் அந்த வழக்கில் கோரிக்கை வைத்தேன்.

நான் தொடர்ந்த வழக்கின் மூலமாக உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் உடனடியாக கட்டடத்தை இடிக்க உத்தரவிட்டன. அதற்கு 2 முறை கால அவகாசம் கேட்ட அ.தி.மு.க. அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் கண்டனத்திற்குப் பிறகு, “இன்னும் 20 நாட்களில் அந்த கட்டடத்தை இடித்து விடுகிறோம்” என்று கடந்த ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி நீதிபதிகள் முன்பு ஒப்புக் கொண்டது அ.தி.மு.க. அரசு.

அதன்படி புதன்கிழமை (நவம்பர் 2) அந்த அடுக்குமாடி கட்டடம் இடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஏற்கனவே இடிந்து விழுந்த 11 மாடிக் கட்டடம், இப்போது இடித்த அடுக்கு மாடிக் கட்டடம் எல்லாவற்றாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான இழப்பீடுகளை அரசு வழங்க முன்வரவில்லை என்பது மிகுந்த வருத்தத்திற்குரியது.

ஆகவே எனது பொதுநல வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின் வாயிலாக அடுக்குமாடிக் கட்டடத்தை இடித்திருக்கும் அ.தி.மு.க. அரசு கவனக்குறைவாகவும், அலட்சியமாகவும் செயல்பட்டாலும், மக்களின் பாதுகாப்புக் கருதி இந்தக் கட்டடத்தை இடிக்க உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

அதே போல் இந்த கட்டட விபத்து குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டால், இதில் அ.தி.மு.க. அரசு மூடி மறைத்துள்ள அனைத்து முறைகேடுகளும் வெளிச்சத்திற்கு வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இந்த கட்டடங்களால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் உடனடியாக இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என்று இந்த நேரத்தில் அ.தி.மு.க. அரசை மீண்டும் கேட்டுக் கொள்கிறேன் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க