October 25, 2018 
தண்டோரா குழு
                                கோவை அருகே ஊருக்குள் நுழைந்த காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறை ஒப்பந்த ஊழியர் யானை தாக்கி பலியானார்.
கோவை கோட்டத்தில் யானைகளை விரட்டும் பணிக்காக ஆர்.ஆர்.டி எனப்படும் சிறப்பு செயலாக்க அணி உருவாக்கப்பட்டுள்ளது.இதில் 10 பேர் பணிபுரிகின்றனர். இவர்கள் நாள்தோறும் காட்டு யானைகள் ஊருக்கும் புகுந்தால் உடனடியாக அங்கு சென்று யானைகளை விரட்டும் பணியில் ஈடுபடுவார்கள்.இந்நிலையில் கோவை அடுத்த சின்ன தடாகத்தில் ஒற்றை காட்டு யானை ஊருக்குள் நுழைந்ததாக கிடைத்த தகவலை அடுத்து இந்த அணியினர் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் அந்த யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திடீரென இவர்களை நோக்கி ஆவேசமாக அந்த யானை வந்துள்ளது.அனைவரும் சிதறி ஓடுகையில் வெங்கடேஷ் என்பவர் கால் தவறி கீழே விழுந்துள்ளார்.இதனையடுத்து அவரை அந்த யானை தாக்கி தூக்கி வீசியது.இதில் வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.தொடர்ந்து பட்டாசுகளை வெடித்து யானையை விரட்டி அவரது உடலை மீட்டு கோவை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு வந்தனர்.
பிரேத பரிசோதனைக்காக வெங்கடேஷ் உடல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.காட்டு யானை தாக்கி உயிரிழந்த சம்பவத்தை அறிந்த சக ஊழியர்கள் மருத்துவமனையில் குவிந்துள்ளனர்.மேலும்,இறந்த வெங்கடேசின் தந்தை ஓய்வு பெற்ற வன காவலர் என்பது குறிப்பிடத்தக்கது.