May 29, 2018
ஷாலினி சுப்பிரமணியம்
ரயில்,விமானம்,பேருந்து,மற்றும் கார் போன்றவைகளுக்கு டிரைவர் இருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.ஆனால் டூ வீலருக்கு டிரைவர் இருப்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பொதுவாக நம்மிடம் பைக் இல்லை என்றால் நண்பரின் பைக்கை வாங்கி செல்வோம்.அப்படி இல்லை என்றால் ஆட்டோ,டாக்ஸி என நம் வசதிக்கு ஏற்ப பயணம் செய்வோம்.ஆனால்,இப்போது டூ வீலருக்கும் டிரைவர் வந்து விட்டார்கள். டூ வீலருக்கும் டிரைவரா ஆச்சரியமாக இருக்கிறாதா?
அதே ஆச்சரியத்துடன் தான் கோவையில் இயங்கி வரும் ராப்பிடோ நிறுவனத்திற்கு சென்றோம்.இது ஓலா மற்றும் உபர் போன்று வடிவமைக்கப்பட்ட ஒரு செயலி(app) தானாம்.நமது கைபேசியில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டு,நாம் இருக்கும் இடம் மற்றும் செல்ல வேண்டிய இடத்தை குறிப்பிட்டால் அவர்களே டூவீலரில் வந்து நம்மை அழைத்து செல்வார்களாம்.
இது குறித்து கோவை ராப்பிடோவின் துணை மேலாளா் திரு.இந்திரராஜ் கூறுகையில்,
ராப்பிடோ நிறுவனம் மக்களின் நலனை கருத்தில்கொண்டு,மக்களுக்காக சேவையாற்றும் மனப்பான்மையோடு துவங்கப்பட்ட நிறுவனமாகும்.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரில் சிறிதாக துவங்கப்பட்ட இந்த அமைப்பு தற்போது 16 மாநகரங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.இந்த சேவை அமைப்பு தமிழகத்தில் தற்போது கோவை,திருச்சி மற்றும் மதுரையிலும் செயல்பட்டு வருகின்றது.ராப்பிடோ நிறுவனம் கோவையில் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு மாதங்களே ஆகின்றன.வண்டி ஓட்டுனரை கேப்டன் என்று அழைப்பது வழக்கம்.இங்கு 28 ஆண் கேப்டன்களும்,இரண்டு பெண் கேப்டன்களும் பணிபுரிந்து வருகின்றனர்.
ஒரு கிலோ மீட்டருக்கு மூன்று ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.இதனால் ஏழை,பணக்காரன் என்ற எந்த ஒரு வேறுபாடும் இல்லாமல் இதனை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.சராசரியாக கோவையில் ஒரு நாளைக்கு 200 முதல் 300 நபர்கள் ராப்பிடோ ஆப் மூலம் பயணம் செய்து வருகிறார்கள். இதுமட்டுமின்றி பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் அவர்களுக்கு தலைக்கவசமும்,ஹேர் நெட்டும் வழங்கப்படுகிறது.மேலும் ராப்பிடோவில் பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு பயணிக்கும் 5000 முதல் விபத்துகாப்பீடு வழங்கப்படுகிறது.
ராப்பிடோ பயணம் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படுகிறது.இச்சேவை வடக்கே கோவில்பாளையம் வரையிலும்,கிழக்கே சூலூர் முருகன் கோவில் வரையிலும்,தெற்கே மலுமிச்சம்பட்டி வரையிலும் மேற்கே மருதமலை வரை ராப்பிடோவில் பயணம் செய்யலாம்.
மேலும், ஓட்டுனரை கண்காணிக்கும் வகையிலும்,பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்யவும் அவர்கள் செல்லும் இடத்தினை டிராக் செய்யவும் முடியும்.சேவை மனப்பான்மையோடு உள்ள இளைஞர்கள்,மக்களுக்கு சேவையாற்ற ராப்பிடோவில் இணைய இது ஒரு சிறந்த வழியாகும்.
ராப்பிடோவில் கேப்டனாக இணைய ஓட்டுனர் உரிமம், சட்டப்படியான ஆவணங்கள் மட்டும் போதுமானது.ஆனால் வண்டி மட்டும் 2007 க்கு பிறகு வந்த வண்டியாக இருக்க வேண்டும்.
மேலும் ஆண்ட்ராய்ட் போன் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்பது ராப்பிடோ நிறுவனத்தின் விதிமுறைகள் ஆகும்.பயணிகளிடமிருந்து பெறும் பணத்தை கேப்டன்களே வைத்து கொள்ளலாம். இதுமட்டுமின்றி பல ஊக்கத்தொகை கேப்டன்களுக்கு வழங்கப்படுகிறது.ராப்பிடோவிற்கு பயணிகள் அதிகரிக்கும் பட்சத்தில் இரவு நேரங்களில் முன்பதிவு செய்யும் வசதிகள் அறிமுகப்படுத்த உள்ளதாக கூறினார்.
இது குறித்து கல்லூரி மாணவன் ரஞ்சித் கூறுகையில்,
குறைந்த செலவில்,சுலபமாக நான் செல்ல வேண்டிய இலக்கை அடைய முடிவதால் நான் தினமும் ராப்பிடோவில் பயணம் செய்து வருகிறேன்.பொதுவாக பேருந்தில் பயணம் செய்யும் போது போக்குவரத்து நெரிசல் நேரம் விரயம் பல சிரமங்களை அனுபவிக்க வேண்டியுள்ளது. ஆனால் ராப்பிடோவில் பயணம் செய்யும் பொது எந்த சிரமமும் இல்லை.ராப்பிடோ செயலியில் புக் செய்தால் நாம் எங்கு இருக்கிறோமோ அங்கேயே வந்து நம்மை அழைத்து சென்று விடுவார்கள் என்றார்.
தற்போது பெட்ரோல் விற்கும் விலையை பார்த்தால் நம் பைக்கிற்கு பெட்ரோல் ஊற்றுவதற்காகவே தனியாக சம்பாதிக்க வேண்டியுள்ளது.ஆட்டோ அல்லது கால் டாக்ஸியில் செல்லலாம் என்றால் அதன் கட்டணதை கேட்டாலே நம் தலை சுற்றிவிடுகிறது.அப்படி இருக்கையில் சேவை நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட ராப்பிடோவில் பயணம் செய்வது என்பது நம் நேரம் மட்டுமின்றி செலவும் குறைவும் என்பதே நிதர்சனமாக உண்மை.