November 15, 2017
தண்டோரா குழு
கோவை நகரப்பேருந்து நிலையத்தில் பயோ டாய்லெட், தூய்மை இந்தியா திட்டப்பணிகள் குறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோவைக்கு முதல் முறையாக வருகை தந்துள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை 7 மணியளவில் கோவை காந்திபுரம் பகுதியில் செயல்பாட்டில் உள்ள நவீன பொது சுகாதார மையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து காந்திபுரம் மாநகர பேருந்து நிலையத்தில் தூய்மை பணிகளை பார்வையிட்ட அவர் பின்னர் தூய்மை பணியிலும் ஈடுபட்டார்.
இதையடுத்து கோவை பீளமேடு பகுதியில் சன்னிசைட் என்ற தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் செயல்படுத்தப்பட்டு வரும் கழிவு பொருட்கள் மேலாண்மை பணியை பார்வையிட்ட அவர் பின்னர் குடியிருப்பு வாசிகளுடன் கலந்துரையாடினார். இதையடுத்து அவருக்கு குடியிருப்புவாசிகள் சார்பில் பூர்ண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.
இந்த ஆய்வின் போது தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், மாநகராட்சி ஆணையாளர் விஜய கார்த்திகேயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.