August 16, 2018
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் சூழலில்,ஒரே நாளில் 765 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடர்ந்து வரும் நிலையில் கோவை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.கோவையில் திருச்சி சாலை,அவினாசி சாலை,காந்திபுரம், துடியலூர் உள்ளிட்ட மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதலாக மழை பெய்து வருகிறது.
கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 765.80மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.அதிகபட்சமாக சின்கோனா பகுதியில் 260 மில்லி மீட்டர் மழையும்,வால்பாறை மற்றும் சின்னக்கல்லாறு பகுதிகளில் 186 மில்லி மீட்டர் மழையளவும் பதிவாகி உள்ளது.
இதனால் வால்பாறை,பொள்ளாச்சி வட்டங்களில் உள்ள பகுதிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.மேலும்,கோவை மாநகரிலும் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு செல்வோர் மற்றும் அலுவலகங்களுக்கு செல்வோர் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.மழை காரணமாக கோவை மாநகரில் வெள்ளூர்,போத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஒரு சில தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் மழையின் காரணமாக கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மறுஅறிவிப்பு வரும் வரை கோவை குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.