January 22, 2018
தண்டோரா குழு
கோவை – பொள்ளாச்சி இடையே இன்று முதல் பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.
கோவை – பொள்ளாச்சி இடையே, காலை, மாலை நேரத்தில் இன்று முதல் சிறப்பு ரயில் சேவை துவங்குகிறது.காலை மற்றும் மாலை இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில்களால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோவை – பொள்ளாச்சி இடையே, அகல ரயில்பாதை அமைக்கும் பணி கடந்த, 2009ல் துவங்கியதால், ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.எட்டு ஆண்டுகளுக்கு பின், அகல ரயில்பாதை பணிகள் முடிவுக்கு வந்தன.
இதையடுத்து, கடந்த ஆண்டு ஜூலை, 15ம் தேதி கோவை – பொள்ளாச்சி இடையே ரயில் போக்குவரத்து துவங்கியது. இச்சேவையும், பொதுமக்களுக்கு பயனற்ற வகையில், மதிய நேரத்தில் இயக்கியதால், பயணிகள் இல்லாமல் காலியாகவே ரயில்கள் ஓடின.இந்நிலையில், பொள்ளாச்சியில் இருந்து காலை, 8:00 மணிக்கும், கோவையில் இருந்து மாலை, 6:00 – 7:00 மணிக்கும் புறப்படும் வகையில் ரயில் நேரம் மாற்றியமைக்க வேண்டும் என, வலியுறுத்தி வேலைக்கு செல்வோரும், மாணவர்களும் போராட்டம் நடத்தினர்.
இதனிடையே,கடந்த 14ம் தேதி முதல், மதுரையில் இருந்து பழநி வரை இயக்கப்பட்ட பயணிகள் ரயில், கோவை வரை நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து, மதிய நேரத்தில், கோவை – பொள்ளாச்சிக்கு இயக்கப்பட்ட ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.
கோவை, பொள்ளாச்சி இடையே, அலுவலக நேரத்துக்கு ஏற்ப ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுப்பெற்றது. இந்நிலையில், கோவை – பொள்ளாச்சிக்கு இன்று முதல் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இந்த சிறப்பு ரயில் சேவை, ஞாயிற்றுக்கிழமைகள் தவிர, வாரத்தில் ஆறு நாட்கள் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அறிவிப்பின்படி, கோவையில் இருந்து அதிகாலை, 5:15 மணிக்கு புறப்படும் ரயில், பொள்ளாச்சிக்கு, 6:45 மணிக்கு வந்தடைகிறது. மீண்டும், 7:15 மணிக்கு பொள்ளாச்சியில் இருந்து புறப்பட்டு காலை, 8:30 மணிக்கு கோவை சென்றடையும். அதே போன்று, மாலை, 6:00 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு, இரவு, 7:15 மணிக்கு பொள்ளாச்சி வந்தடைகிறது. இரவு, 7.45 மணிக்கு பொள்ளாச்சியில் இருந்து திரும்பும் ரயில், இரவு, 9:00 மணிக்கு கோவையை சென்றடைகிறது.
தற்போது பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் சாதாரண பஸ்களில், 17 ரூபாய் என்றிருந்த கட்டணம், 25 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ் பஸ்களில், 23 ரூபாய் கட்டணம், 34 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.இந்நிலையில், கோவை – பொள்ளாச்சிக்கு சிறப்பு ரயில் சேவை துவங்கப்பட்டுள்ளது.