May 11, 2018
தண்டோரா குழு
பொள்ளாச்சியில் செல்போன் பேசிக்கொண்டு தனியார் பேருந்தை ஓட்டிய ஓட்டுனருக்கு தண்டனையாக போக்குவரத்து போலீஸார் 6 மணி நேரம் டிராபிக் ஒழுங்குபடுத்தும் பணியை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
கோவை அடுத்த பொள்ளாச்சி முள்ளிப்பாடி கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவர் தனியார் பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.இவர் பொள்ளாச்சியில் இருந்து மீனாட்சிபுரம் நோக்கி சென்ற போது பேருந்தை செல்போன் பேசியபடி இயக்கியுள்ளர்.இதனை பயணி ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
இதனடிப்படையில் ஓட்டுனர் முருகானந்தத்தை விசாரித்த காவல்துறையினர் அவருக்கு வித்தியாசமான தண்டனையாக பொள்ளாச்சி காந்தி சிலை அருகே சிக்னல் டிராபிக் ஒழுங்குப்படுத்தும் பணியை மேற்கொள்ளும்மாறு உத்தரவிட்டனர்.
இதனையடுத்து மதியம் 2 மணி முதல் இரவு 8 மணிவரை தொடர்ந்து 6 மணி நேரம் டிராபிக் ஒழுங்குப்படுத்தும் பணியை முருகானந்தம் மேற்கொண்டார்.அதுமட்டுமின்றி முருகானந்தம் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஒட்டியவர்களுக்கு அறிவுரையும் வழங்கினர்.
போக்குவரத்து போலீஸாரின் இந்த தண்டனை மற்ற ஓட்டுனர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் வகையில் வழங்கப்பட்டதால் பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.