January 22, 2018
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் 100 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் தான் உள்ளதாக கூறி நடவடிக்கை எடுக்க வலியுறித்தி வெல்ஃபேர் பார்ட்டி ஆப் இந்தியா கட்சி சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட கரும்புக்கடை பகுதியில் சுமார் 50,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இப்பகுதியில் 1967ல் ஆரம்பிக்கப்பட்ட ஒரேயொரு மாநகராட்சி ஆரம்பப் பள்ளி மட்டுமே உள்ளது. ஐந்தாம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் ஒரு ஆங்கில வழி வகுப்பும் உள்ளது.இங்கு 100 மாணவர்கள் பயின்றுவருகின்றனர். ஆனால், ஒரேயொரு ஆசிரியர்தான் உள்ளார்.தற்போது தற்காலிகமாக ஒரு ஆசிரியர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக இங்கு பயிலும் மாணவர்களின் கல்வித்தரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.இங்கு பயிலும் மாணவர்கள் உயர் கல்வி பெற பிற பள்ளிகளில் சேர இயலாத சூழல் உள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் உடனே தலையிட்டு தேவையான ஆசிரியர்களை நியமனம் செய்து மாணவர்களின் கல்வித்தரம் உயர நடவடிக்கை எடுக்கும் படி பகுதி மக்கள் சார்பாக இன்று வெல்ஃபேர் பார்ட்டி ஆப் இந்தியா கட்சி, கோவை மாவட்டம் தெற்கு மண்டலம் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வெல்ஃபேர் பார்ட்டி ஆப் இந்தியா கட்சி, கோவை மாவட்ட துணைத்தலைவர் எ.ஜே.ரெஜீனா, தெற்கு மண்டலத்தலைவர் எச்.முஜீப், 75- வது வார்டு தலைவர் சபீனா சம்ஸ், துணைத்தலைவர் டைலர் அப்பாஸ், சம்சுதீன், 82 வது வார்டு தலைவர் மருத்துவர் T.A. காஜா நஜ்முதீன், பொருளாளர் டைலர் முஜீப் மற்றும் பகுதி பெண்கள் ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்தனர்.