August 3, 2018
தண்டோரா குழு
சுகப்பிரசவம் நிகழ எளிய வழி காட்டும் நிகழ்ச்சி கோவையில் நடத்த இருப்பதாக விளம்பரம் செய்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நிஷ்டை அமைப்பின் நிர்வாகி ஹீலர் பாஸ்கர் மற்றும் மேலாளர் ஸ்ரீனிவாசன் இருவரையும் வருகின்ற 16ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க 7வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூரில் வீட்டிலேயே சுகப்பிரசவதிற்காக முயற்சித்து ரத்தப்போக்கு ஏற்பட்டு இளம்பெண் கிருத்திகா சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்தார்.இந்நிலையில் வீட்டிலேயே சுகப்பிரசவத்திற்கு முயல்வது சரியானது தானா? அறிவுபூர்வமானதா? என்ற கேள்வியும் எழுந்தது.
அலோபதி மருத்துவர்கள் வீட்டில் பிரசவம் பார்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இயற்கை மருத்துவர்களும் அதன் ஆதரவாளர்களும் இந்த முறையை வரவேற்கவே செய்கின்றனர். இந்நிலையில்,கோவை புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் நிஷ்டை என்ற அமைப்பு வீட்டிலேயே சுகப்பிரசவம் நிகழ்வதற்கு எளிய வழிகாட்டும் நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் 26 ம் தேதி கோவையில் நடைபெறும் எனவும் இந்த இலவச பயிற்சி முகாமில் கலந்து கொண்டு கர்பிணி பெண்கள் பயன் பெறலாம் எனவும் விளம்பரம் செய்து இருந்தது.
இந்த விளம்பரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்த அமைப்பு ஹீலர் பாஸ்கர் என்பவரால் நடத்தப்பட்டு வரும் நிலையில்,இந்த விளம்பரம் குறித்து அவரிடம் வீட்டிலேயே சுகப்பிரசவம் என்பது சரியாக அமையுமா என கேள்வி எழுப்பப்பட்டது.ஆனால்,ஊடகங்களிடம் இது குறித்து பேச விருப்பமில்லை என தெரிவித்த ஹீலர் பாஸ்கர்,தமிழக டி.ஜி.பி, சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் தன்னிடம் நேரில் வந்து விளக்கம் கேட்டால் மட்டுமே உரிய விளக்கம் அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும் அவரையும்,அவரது அலுவலகத்தையும் படம் எடுக்க அனுமதியில்லை எனவும் பேட்டியளிக்கவும் தனக்கு விருப்பமில்லை எனவும் ஹீலர் பாஸ்கர் தெரிவித்தார்.இந்நிலையில் வீட்டிலேயே சுகப்பிரசவம் பார்க்க ஆகஸ்ட் 26 ம் தேதி ஓரு நாள் பயிற்சி என்ற நிஷ்டை அமைப்பின் சர்ச்சைக்குரிய விளம்பரம் குறித்து சுகாதாரதுறையினருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து அந்த விளம்பரம் குறித்து சுகாதார துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நிஷ்டை என்ற அமைப்பு குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும்,மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோரிடம் இந்த விளம்பரம் குறித்து கலந்தாலோசித்து இருப்பதாகவும் அந்த அமைப்பு குறித்து முழு தகவல்களும் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் கோவை மண்டல சுகாதார துறை இணை இயக்குர் பானுமதி தெரிவித்தார்.
நிஷ்டை அமைப்பு மீது காவல்துறையில்அளிக்கப்பட்டுள்ளது எனவும் காவல் துறையினரும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் பானுமதி தெரிவித்தார்.இதனிடையே பானுமதி கொடுத்த புகாரின் பேரில் நிஷ்டை அமைப்பின் நிர்வாகியான ஹீலர்பாஸ்கரன் மற்றும் மேலாளர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் கைது செய்யபட்டு இருவரிடமும் குனியமுத்தூர் காவல் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மேலும் பாஸ்கர் மற்றும் மேலாளர் ஸ்ரீனிவாசன் மீது 420 மற்றும் 511 ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ள போலீசார்,பின்னர் கோவை மாவட்ட 7வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பாண்டி முன்பு ஆஜர்படுத்தினர்.இதனைத்தொடர்ந்து இருவரையும் வருகின்ற 16ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.