January 25, 2018
தண்டோரா குழு
கோவையை அடுத்த மருதமலையில் பிரசித்தி பெற்ற முருகனின் 7வது படைவீடு என்று பக்தர்களால் போற்றப்படும் முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது
இன்று சேவல் சின்னம் பொறித்த கிருத்திகை கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கொடிமரத்தில் சேவற்கொடி ஏற்றப்பட்டது. அப்போது, ஆதிவாசி மக்கள் உருமி, கொம்பு, பறை, மேள-தாள வாத்தியங்களை இசைத்து எழுப்பினார். பின்னர் மகாதீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து மூலஸ்தான மண்டபத்தில் வேள்வி பூஜை தொடங்கியது.
இதனைத்தொடர்ந்து சுப்பிரமணியசுவாமி வள்ளி-தெய்வானையோடு கோவிலைச்சுற்றி வீதி உலா வந்தார்.தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். இது தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி தினத்தன்றோ அல்லது அந்த தினத்தையொட்டியோ தைப்பூசம் கொண்டாடப்படுகின்றது. இந்தநாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றது.