July 26, 2018
தண்டோரா குழு
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கூறப்பட்ட விடுதி உரிமையாளர் ஜெகநாதன் உடல் கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கோவை சேரன்மாநகர் அருகே உள்ள வி.ஐ.பி. நகரை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 48).இவர் கோவை பாலரங்கநாதபுரம் ஜீவா வீதியில் தர்ஷனா என்ற பெயரில் மகளிர் விடுதி நடத்தி வருகிறார். 4 மாடிகளை கொண்ட இந்த விடுதியில் கல்லூரி மாணவிகள்,ஐ.டி. மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் இளம்பெண்கள் என 180 பேர் தங்கியுள்ளனர்.ஜெகநாதனுக்கு சொந்தமான இந்த விடுதியில் புனிதா என்பவர் வார்டனாக உள்ளார்.
இதற்கிடையில்,பெரும்பாலும் மது போதையில் இருக்கும் புனிதா பல்வேறு ஆசை வார்த்தைகளை கூறி விடுதியில் தங்கியுள்ள மாணவிகளை பாலியல் ரீதியாக தவறான பாதைக்கு அழைத்துள்ளதாக கூறப்படுகிறது.மேலும்,விடுதி உரிமையாளர் ஜெகநாதனுடன் செல்போன் வாட்ஸ் ஆஃப் வீடியோ அழைப்பில் பேசும் படி கூறி இருக்கிறார்.
இதுமட்டுமின்றி வார்டன் புனிதா மாணவிகளிடம்,விடுதி உரிமையாளர் மற்றும் சிலருடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள், பெற்றோருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து பெற்றோர்களும் உறவினர்களும் விடுதியை முற்றுகையிட்டனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.மேலும் இந்த சம்பவம் குறித்து மாணவிகளின் பெற்றோர் பீளமேடு போலீசில் புகார் செய்தனர்.அதன் பேரில் போலீசார் அந்த விடுதி உரிமையாளர் ஜெகநாதன்,வார்டன் புனிதா ஆகியோர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம்,கொலை மிரட்டல் ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இதனால் பயந்து போன விடுதி உரிமையாளர் ஜெகநாதன் மற்றும் விடுதி காப்பாளர் புனிதா தலைமறைவாகினர்.இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்நிலையில் விடுதி உரிமையாளர் ஜெகநாதன் ஆலங்குளத்தில் உள்ள கிணறு ஒன்றில் சடலமாக இறந்து கிடந்தார்.ஜெகநாதன் தற்கொலை செய்து கொண்டாரா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.