August 11, 2018
தண்டோரா குழு
ஹீலர் பாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கோவை 7வது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மரூட்டி முறையில் வீட்டில் இருந்தபடியே மருந்து மாத்திரை,தடுப்பூசி எதுவும் இன்றி சுகப்பிரசவமாக குழந்தை பெற்றுக் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்த பயிற்சி முகாம் நடைபெறும் என கோவைபுதூரில் செயல்பட்டு வரும் நிஷ்டை சர்வதேச வாழ்வியல் பயிற்சி மையம் சார்பில் அறிவிக்கப்பட்டது.இதற்காக சமூக வலைத்தளங்கள் வாயிலாக விளம்பரம் செய்யப்பட்டது.
இது பெரும் சர்ச்சையை கிளப்பியதையடுத்து கோவை குனியமுத்தூர் போலீசார்,நிஷ்டை மையத்தின் உரிமையாளர் ஹீலர் பாஸ்கர்,நிஷ்டை அமைப்பின் மேலாளர் சீனிவாசன் ஆகியோரை மோசடி மற்றும் ஏமாற்ற முயற்சி என இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கடந்த 2ம் தேதி கைது செய்தனர்.
இதனையடுத்து,கைது செய்யப்பட்ட ஹீலர் பாஸ்கர் மற்றும் அவரது மேலாளர் ஸ்ரீனிவாசன் ஆகிய இருவரையும் வருகின்ற 16ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோவை மாநகர 7வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தவிட்டார்.நீதிமன்ற உத்தரவிட்டதையடுத்து இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கபட்டனர்.
இதையடுத்து,ஜாமீன் கோரி ஹீலர் பாஸ்கர் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டது. இம்மனுவை விசாரித்த கோவை 7வது குற்றவியல் நீதிமன்றம் ஹீலர் பாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.மேலும்,30 நாட்கள் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.