October 2, 2018
தண்டோரா குழு
கோவை அரசு மருத்துவமனையில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர் நலத்துறை துணை தாசில்தாராக பொறுப்பு வகித்த அப்துல் ரகுமான் சிகிச்சை பலனின்றி பலியானார்.
கூடலூரில் வட்டாட்சியராக இருந்தவர் அப்துல் ரகுமான்(43).ஆதிதிராவிடர் நலத்துறை துணை தாசில்தாராக பொறுப்பு வகித்து வரும் இவர் ஊட்டியில் உள்ள பழைய அறவங்காடு பகுதியில் வசித்து வருகிறார்.இவரின் சகோதரர் கார்கில் போரில் வீரமரணம் அடைந்துள்ளார்.இதனால் இவருக்கு அரசு பணியில் வேலை வாய்ப்பு கிடைத்தது.
இவர் கடந்த சில நாட்களாகவே காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நீலகிரியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் இவர் கடந்த 29ஆம் தேதி மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
பின்னர் இவரது உடல்நிலை மிகவும் மோசமானதையடுத்து கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இவர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது.