October 9, 2018
தண்டோரா குழு
சேலம் சங்ககிரியை சேர்ந்த பழனியப்பனின் மகன் செல்வம் என்ற செல்வராஜ் (31).இவர் பீளமேடு பகுதியில் கடந்த 2015ம் ஆண்டில் நடைபெற்ற கொலை வழக்கில் தண்டனை பெற்று ஆயுள் தண்டனை கைதியாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் அடைக்கப்பட்ட இவரை இவரது மனைவி வாரம் வாரம் வந்து மனுப்போட்டு சந்திப்பது வழக்கம்.ஆனால் மனைவிக்கும் செல்வராஜுக்கும் மூன்று மாதங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது.இதனால் கோபத்தில் இருந்த மனைவி செல்வராஜை சுமார் மூன்று மாதங்களாக வந்து பார்க்கவில்லை.இதனால் மனம் உடைந்து போன கைதி செல்வராஜ் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அறுக்கும் கம்பிகளை வைத்து இடது மணிக்கட்டில் அறுத்துள்ளார்.கொசு விரட்டி மருந்தையும் குடித்துள்ளார்.
பின்னர் இதையறிந்த சக கைதிகள் சிறைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.பின்னர் வந்த சிறைத்துறை அதிகாரிகள் கைதியை ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு,தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் உடல்நலம் தேறி வந்து கொண்டிருந்த ஆயுள் தண்டனை கைதி செல்வம் இன்று அதிகாலை எதிர்பாராதவிதமாக மருத்துவமனையில இருந்து தப்பி ஓடினார்.இதையடுத்து மருத்துவமனை வளாகம் முழுவதும் காவலர்கள் செல்வத்தை தீவிரமாக தேடினர்.அதேபோல சிறைத்துறை காவலர்களும் கோவை மாநகர போலீசாரும் தப்பித்து ஓடிய சிறைக் கைதியை பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.