• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அரசு மருத்துவமனையில் மர்ம காய்ச்சல் பாதிப்பால் முதியவர் உயிரிழப்பு

October 26, 2018 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவமனையில் மர்ம காய்ச்சல் பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் இன்று உயிரிழந்தார்.அவர் பன்றிக் காய்ச்சலுக்கு உயிரிழந்ததாக சில தகவல்கள் வெளியாகி வரும் நிலையில்,இதற்கு மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பன்றி மற்றும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.மாநிலம் முழுவதும் இதுவரை இந்தக் காய்ச்சல்களுக்கு 17 பேர் உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.இதனை தடுக்க சுகாதாரத்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மேலும்,மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் தரப்பிலும் கூட பல்வேறு தூய்மைப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,கோவை பட்டணம் பகுதியில் உள்ள காமாட்சியம்மன் கோவில் வீதியில் வசித்து வந்தவர் தேவராஜ் (61).இவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தீவிர காய்ச்சல் பாதிப்பினால் அவதிப்பட்டு வந்தார்.இதனால்,சிகிச்சைக்காக அவரது உறவினர்கள் அவரை கடந்த திங்கட்கிழமை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.அப்போது,கோவை அரசு மருத்துவமனையில் இவருக்கு மர்ம காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து,தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக தேவராஜை அவரது உறவினர்கள் அழைத்துச் சென்றனர்.ஆனால்,தனியார் மருத்துவமனையில் இவருக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்காததால்,மீண்டும் அவர் இன்று அதிகாலை கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார்.

இந்நிலையில் தேவராஜுக்கு கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்,அவர் இன்று காலை சுமார் 10.30 மணி அளவில் உயிரிழந்தார்.ஆனால்,உயிரிழந்த முதியவர் பன்றி காய்ச்சல் பாதிப்பால் தான் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில்,அவரது இறப்பிற்கு மருத்துவமனை நிர்வாகமோ வேறு சில காரணங்களை முன் வைக்கிறது.

இதுகுறித்து தேவராஜின் உறவினர் ஒருவர் கூறுகையில்,

“உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தேவராஜை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தோம்.இங்கு மர்ம காய்ச்சல் தொற்றால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இவரது இறப்பைத் தொடர்ந்து,சுகாதாரத்துறையினர் இறந்த தேவராஜின் வீட்டருகே வந்து சுத்தம் செய்து பிளிச்சிங் பவுடர்களை இன்று தெளித்தனர்.இந்த தூய்மை செயல்பாடுகளை முன்னரே செய்திருந்தால் உயிர் இழப்பு ஏற்பட்டிருக்காது”என்றார்.

முதியவர் தேவராஜ் மர்ம காய்ச்சல் மற்றும் வேறு சில குறைபாடுகளால் உயிரிழந்துவிட்டதாக கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் கூறியிருந்தாலும்,சாதாரண காய்ச்சலுக்கு உயிரிழந்தவரின் வீட்டருகே சுகாதாரத்துறையினர் திடீரென தூய்மைப் பணியில் ஈடுபட்டது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

கடந்த சில நாட்களாக கோவை அரசு மருத்துவமனையில் பன்றி மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்கு வருவதாக தகவல்கள் ஒருபுறம் வெளியாகி வரும் நிலையில்,இதற்கு மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருவது வாடிக்கையாகியுள்ளது.மேலும்,பன்றி காய்ச்சலின் தாக்கம் குறித்த உண்மையான தகவல்களை வெளியிட்டால் மட்டுமே,பொதுமக்களும் சுகாதாரத்தில் ஜாக்கிரதையாக செயல்படுவதற்கு வழிவகுக்கும் என்பது நிதர்சனமான உண்மை.

மேலும் படிக்க