August 13, 2018
தண்டோரா குழு
நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடங்களில் உள்ள கட்டிடங்களுக்கு சீல் வைத்தது போல,கோவை மாவட்டத்திலும் யானை வழித்தடங்களில் உள்ள கட்டிடங்களை அகற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடங்களில் உள்ள கட்டிடங்களை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இதனையடுத்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள 27 கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கோவை மாவட்டத்தில் நொய்யல் ஆற்றின் கரையோரம் பல்வேறு சொகுசு விடுதிகள் இருப்பதாகவும்,இந்த கட்டிடங்கள் அனைத்தும் யானை வழித்தடப் பகுதிகளில் உள்ளதால்,இந்த கட்டிடங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்தனர்.
அந்த மனுவில்,யானை வழித்தடங்களில் கட்டிடங்கள் உள்ளதால்,யானைகள் அடிக்கடி ஊருக்குள் வருவதால் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும்,இதனால் உடனடியாக கோவை மாவட்டத்திலும் யானை வழித்தட பாதைகளை சீர் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.