July 26, 2018
தண்டோரா குழு
அமெரிக்காவைப் பார்த்து நாம் வியப்பதற்கு எவ்வளவு இருக்கிறதோ அதே அளவுக்கு வெறுக்க வேண்டிய விஷயங்களும் உள்ளது என நடிகர் ராஜேஷ் கூறியுள்ளார்.
கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவில் பிரபல தொழிலதிபரும்,கோவை நன்னெறிக் கழகத்தின் தலைவருமான இயகோகா சுப்பிரமணியம் எழுதிய ‘நிறம் மாற்றும் மண்’நூலின் வெளியீட்டுவிழா நடைபெற்றது.சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் நூலை வெளியிட மூத்த வழக்கறிஞர் என்.வி.நாகசுப்ரமணியம் நூலைப் பெற்றுக்கொண்டார்.
நாஞ்சில் நாடன் தலைமை உரையில் ‘எங்கு சென்றோம்,என்ன பார்த்தோம்,என்ன உண்டோம் என்று பலரும் பயணக்கட்டுரைகள் எழுதுகிறார்கள்.அது வெறும் சுற்றுலா அனுபவமே.பயணத்தின் போது ஒருவருக்கு உண்டாகக்கூடிய பார்வை,இன்னொரு பண்பாட்டினை ஊடறுத்துப் பார்க்கும் நுண்ணிய நோக்குடையவர்களால் எழுதப்படும் பயணக்கட்டுரைகளுக்கே மதிப்புண்டு.
இயகோகா சுப்பிரமணியம் தனது அமெரிக்க மற்றும் கனடா தேசங்களில் ஏற்பட்ட பயண அனுபவங்களை மிக துணிச்சலாக வெளிப்படையாக சுவாரஸ்யமான நடையில் எழுதியுள்ளார் என்றார்.
இவ்விழாவில் சிறப்புரை ஆற்றிய நடிகர் ராஜேஷ்,
தமிழர்களின் வாழ்க்கை முறை என்பது இயற்கையோடு இயைந்த வாழ்க்கை.அமெரிக்கர்களுடையது இயற்கைக்கு எதிரான வாழ்க்கை முறை.அமெரிக்காவைப் பார்த்து நாம் வியப்பதற்கு எவ்வளவு இருக்கிறதோ அதே அளவுக்கு வெறுக்க வேண்டிய விஷயங்களும் உள்ளது.நூலாசிரியர் இயகோகா சுப்பிரமணியத்திற்கு நல்ல ரசனை இருக்கிறது.பக்கச் சாய்வின்றி இந்தியாவுக்கும் பிறநாடுகளுக்கு இடையே உள்ள ஏற்றதாழ்வுகளை அலசுகிறார்.அவரது தேசப்பற்றும்,பண்பாட்டுப் பற்றும், தாய்ப்பாசமும் நூலின் கட்டுரைகளில் மிளிர்கின்றன என்றார்.
மேலும்,இவ்விழாவில் நமது நம்பிக்கை இதழின் ஆசிரியர் மரபின் மைந்தன் முத்தையா பதிப்பாளர் உரையாற்றினார்.திருப்பூர் வைகிங் குழுமத்தலைவர் ஏ.சி.ஈஸ்வரன்,கோவை புத்தகத் திருவிழா தலைவர் எஸ்.செளந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டார்கள்.