August 15, 2018
தண்டோரா குழு
கோவையில் 3 மாத பெண் குழந்தை கடத்தப்பட்டதாக நாடகமாடி,கொலை செய்த வழக்கில் குழந்தையின் தாயும்,அவருடன் தவறான உறவு வைத்திருந்த நபரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோவை சரவணம்பட்டி அடுத்த சிவானந்தபுரம் பகுதியில் கார்த்திகேயன் மற்றும் வனிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர்.ஏற்கனவே இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில்,கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு இரண்டாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதையடுத்து முதல் குழந்தையை திண்டுக்கல் சிறுமலை பகுதியிலுள்ள வனிதாவின் தாய் வீட்டில் விட்டுவிட்ட அவர்,தனது மூன்று மாத குழந்தையான கவிஸ்ரீயை மட்டும் தன்னுடன் வைத்து வளர்த்து வந்துள்ளார்.கார்த்திக் கோவை ராமகிருஷ்ணாபுரம் பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் சூழலில்,வனிதா மற்றும் குழந்தை கவிஸ்ரீ மட்டும் வீட்டில் இருந்துள்ளனர்.
இந்நிலையில் வனிதா தனது வீட்டில் உறங்கி கொண்டிருந்த குழந்தையை மர்ம நபர்கள் கடத்தி சென்றதாகவும்,அப்போது தான் குளியலறையில் குளித்து கொண்டிருந்ததாகவும் தனது கணவருக்கு தகவலளித்துள்ளார்.
இதையடுத்து விரைந்து வந்த கார்த்திகேயன்,தனது மனைவி வனிதாவுடன் சென்று சரவணம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.காவல்துறையினர் வனிதாவிடம் நடத்திய விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளிக்கவே சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
அப்போது குழந்தையை தானே கொலை செய்ததை ஒப்புக்கொண்டார் வனிதா.மேலும்,தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஸ்ரீனிவாசன் என்பவருடன் தவறான உறவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்ததாகவும்,குழந்தை வந்த பிறகு அவருடன் நெருக்கமாக பழக முடியாததால் இருவரும் சேர்ந்து திட்டமிட்டு கொலை செய்ததாக காவல்துறையினர் விசாரணையில் வனிதா தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்ததனால் குடும்பத்தில் மனஉளைச்சல் இருந்த நிலையில் குழந்தையை கொலை செய்ய திட்டமிட்டு,காலை குழந்தைக்கு வழங்கப்படும் இருமல் மருந்தை அதிகபடியாக கொடுத்து தூங்க வைத்து,மதியம் கணவர் உணவு சாப்பிட்டு விட்டு மீண்டும் பணிக்கு சென்றவுடன்,வீட்டில் உள்ள கத்தியால் கழுத்தில் அறுத்ததாகவும்,அப்போது ஸ்ரீனிவாசன் குழந்தையின் கை,கால்களை பிடித்து கொண்டதாகக் கூறியுள்ளார்.
இதையடுத்து,இருவரும் திட்டமிட்டபடி,குழந்தையை பையில் வைத்து குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு காணாமல் போனதாக நாடகமாடியதாக வாக்குமூலம் தெரிவித்துள்ளார்.தொடர்ந்து கொலைக்கு உடந்தையாக இருந்ததாக ஸ்ரீனிவாசனும் கைது செய்யப்பட்டார்.தொடர்ந்து இருவரும் கோவை 2வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.இருவரையும் வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்றம் காவலில் உத்தரவிடப்பட்டதை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டனர்.