October 1, 2018
தண்டோரா குழு
தகாத உறவு குற்றமல்ல என நீதிமன்றமே உத்தரவிட்டதால் தகாத உறவை கைவிடமாட்டேன் என கணவர் சவால் விடுத்ததை அடுத்து மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நெசப்பாக்கம் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த ஜான் பால் பிராங்க்ளின் என்பவர் அதே பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.இவர் கடந்த 2016 ஆண்டு புஷ்பலதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கும் அங்கு துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்த பெண்ணுக்கும்,தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் புஷ்பலதா தனது கணவரை கண்டித்துள்ளார்.இதனைத் தொடர்ந்து கணவன்- மனைவியிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்றிரவு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.அப்போது,மனைவி புஷ்பலதா கேட்டதற்கு, நீதிமன்றமே தகாத உறவு குற்றமல்ல என உத்தரவிட்டுள்ளதால்,என்னை ஒன்றும் செய்ய முடியாது.நான் அந்த பெண்ணுடன் தான் வாழ்வேன் எனக் கூறியுள்ளார்.இதனைக் கேட்ட புஷ்பலதா மனவேதனையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதையடுத்து இச்சம்பவம் குறித்து எம்.ஜி.ஆர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.