October 12, 2018
தண்டோரா குழு
திராவிடக் கட்சிகள் போன்று பணத்தை கொடுத்து வாக்குகள் பெற அவசியம் இல்லையென்றும்,மத்திய அரசால் கடந்த 4 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை மக்களிடம் தெரிவித்து வாக்குகள் சேகரிப்போம் என பாஜக இளைஞரணி மாநில தலைவர் வினோஜ் செல்வம் தெரிவித்துள்ளார்.
கோவையில் நடைபெற்ற பாஜக இளைஞரணி பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் தலைமை வகித்த அவர் இதனை தெரிவித்தார்.கோவை பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பாஜக நிர்வாகிகள்,பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் சுந்தராபுரம் பகுதியில் நடைபெற்றது.இந்த கூட்டத்தின் போது,குறிச்சி பகுதி மற்ற கட்சிகளை சேர்ந்த இளைஞர்கள் 100பேர் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டனர்.
தமிழகம் முழுவதும் உள்ள 67,654 சாவடிகளுக்கு நிர்வாகிகளை நியமித்து இளைஞர்கள் தேர்தலுக்கு தயாராகும் பணிகளில் ஒரு பகுதியாக இந்த ஆலோசனை கூட்டம் நடந்து வருவதாகவும்,மேலும் கரூர்,கோவையை தொடர்ந்து நீலகிரி,சேலம்,நாமக்கல் ஆகிய பாராளுமன்ற தொகுதியில் இளைஞரணி ஆலோசனை கூட்டம் நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.