• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜனநாயகத்திற்கும், அரசியல் சட்டத்திற்கும் எதிரான நடவடிக்கைகளில் பாஜக ஈடுபட்டு வருகிறது: கருணாநிதி

October 17, 2016 தண்டோரா குழு

2017-ல் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலை மனத்தில் கொண்டு, எந்த உத்தியையாவது கடைப்பிடித்து வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில், ஜனநாயகத்திற்கும், அரசியல் சட்டத்திற்கும் எதிரான நடவடிக்கைகளில் பா ஜ க ஈடுபட்டு வருகிறது என திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:

தமிழக விவசாயிகளுக்கு முறைப்படி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி நியாயமாகக் கொடுக்க வேண்டிய தண்ணீரைத் தர மறுத்து வரும் கர்நாடக அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அந்த அரசை நல்வழிப்படுத்துவதற்குப் பதிலாக, அந்த மாநிலத்தில் வரவிருக்கின்ற சட்டப் பேரவைத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற அரசியல் நோக்கத்திற்காக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்த பிறகும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திடத் திடீரென மறுத்து தமிழகத்திற்கு பாஜக எதிராகக் காயை நகர்த்தி வருகிறது.

அது போலவே, வரவிருக்கும் உத்தரப் பிரதேச மாநிலச் சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெறும் நோக்கத்தோடு, பாஜக, அயோத்தி ராமர் கோயில் பிரச்சினையை மீண்டும் கையில் எடுத்து உணர்ச்சிக் கொந்தளிப்பை உருவாக்கும் என்று தெரிவதாக ஏடுகளில் செய்தி வந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகரான லக்னோவில் பிரதமர் நரேந்திர மோடி, அண்மையில் ராம்
லீலா நிகழ்ச்சியிலே கலந்து கொண்டதில் இருந்து, ராமர் கோயில் விவகாரம் மீண்டும் தலை தூக்கும் என்று தெரிகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை லக்னோவில் நடைபெற்ற தசரா விழாவில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அவர் தனது உரையின் தொடக்கத் திலும், பேச்சை முடிக்கும்போதும், “ஜெய் ஸ்ரீ ராம்” என “மதச் சார்பற்ற குடியரசு” என இந்திய அரசமைப்புச் சட்டத்திலே பொறிக்கப்பட்டுள்ளதைப் புறக்கணித்து முழக்கமிட்டார்.

அத்துடன் நில்லாமல் அவர், அந்த முழக்கம் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்றடையும் வகையில் உரக்கக் குரல் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். மேலும் தனது உரையிலே ராமரின் சிறப்பு பற்றி யெல்லாம் எடுத்துரைத்தார். அந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு, ராமரின் வில் அம்பு, அனுமனின் கதாயுதம், மற்றும் விஷ்ணுவின் சின்னமான சுதர்சனச் சக்கரமும் நினைவுப் பரிசுகளாக அளிக்கப் பட்டுள்ளன.

மொத்தத்தில் “இந்து சாம்ராஜ்யம்” என்ற கற்பனையில் அனைத்தும் அன்று நடந்தேறின. இவையெல்லாம் உத்தரப் பிரதேசத் தேர்தலை மனத்திலே வைத்து, பிரதமர் நடத்திய அரசியல் தேர்தல் பிரசாரம் என்றே கருதப்படுகிறது.

இன்னும் சொல்லவேண்டுமேயானால், உத்தரப் பிரதேச மாநில பா.ஜ.க. நிர்வாகிகள் கூறும்போது, “உத்தரப் பிரதேசத் தேர்தலுக்காக இந்துத்துவா வகை அரசியல் பிரச்சாரத்தைத் தொடங்கவே மோடி இங்கு வந்திருந்தார். இதன் மூலம் பா.ஜ.க. வினருக்கு ஒரு சமிக்ஞை கொடுக்கப்பட்டு விட்டது” என்றனர்.
இதைப் பற்றி, அந்த மாநிலக் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “இது வரை ராமர் கோயில் என்பதை கலாச்சாரத்தின் வெளிப்பாடாகக் கூறி வந்தனர். ஆனால் பொது மக்களின் முன் நம் நாட்டின் பிரதமரே ராமரை வழிபட்டதுடன் “ஜெய் ஸ்ரீ ராம்” என்று முழக்கமும் இடச் சொல்லியிருப்பது, சட்டப் பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. வின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்பதைக் காட்டும் விதத்தில் அமைந்துள்ளது” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

லக்னோவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களே ராம சரிதத்தை வெளிப்படையாகப் பிரகடனம் செய்ததன் தொடர்ச்சியாக, உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமாயண அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 25 ஏக்கர் நிலமும் கண்டறியப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வட்டாரங்கள் இதுபற்றி தெரிவிக்கும் போது, “அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராம ஜென்ம பூமி, பாபர் மசூதி அமைந்துள்ள இடத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலே ராமாயண அருங்காட்சியகம் ஒன்றை அமைப்பதற்காக 25 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் அங்கே சென்று அந்த இடத்தைப் பார்வையிடுவார் என்றும் ராமாயண ஆலோசனை வாரிய உறுப்பினர் களுடன் அவர் கலந்தாலோசனை செய்வார் என்றும் தெரியவருகிறது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் அயோத்தியில் சர்வதேச ராமாயண மாநாட்டை நடத்துவது தொடர்பாகவும் அமைச்சர் மகேஷ் சர்மா ஆலோசனை செய்துள்ளார்” என்று தெரிவித்துள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மத ரீதியாக மத உணர்வுகளைத் தூண்டிவிட்டு, அங்கே இந்துக்களின் வாக்குகளைப் பா.ஜ.க.வுக்கு ஆதரவாகப் பெறுவதற்காக பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு இப்படிப்பட்ட காரியங்களில் இறங்கியிருப்பது கடுமையான கண்டனத்திற்குரியதாகும்.

மத்திய அரசு, குறிப்பாகப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இப்படிப்பட்ட நாளொரு வேடம் பொழுதொருநடிப்பு என்ற கபட நாடகமாடும் செயல்களை ஊக்குவிப்பதைத் தவிர்த்து நாட்டு மக்கள் பிரச்சினைகளில் நாள்தோறும் கவனம் செலுத்துவது நல்லது என கூறியுள்ளார்.

மேலும் படிக்க