August 16, 2018
தண்டோரா குழு
முன்னாள் பிரதமரும்,பாரதிய ஜனதா மூத்த தலைவருமான வாஜ்பாய் இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.
முன்னாள் பிரதமரும், பாரதிய ஜனதா மூத்த தலைவருமான வாஜ்பாய் (வயது 93) முதுமை மற்றும் உடல்நலக்குறைவின் காரணமாக டெல்லியில் உள்ள வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையில்,அவருக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டதாலும்,உடல்நிலை பாதிக்கப்பட்டதாலும் கடந்த ஜூன் மாதம் 11-ந் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து கடந்த 9 வாரங்களாக எய்ம்ஸ் மருத்துவமனையில் வாஜ்பாய்க்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில்,கடந்த 24 மணி நேரமாக வாஜ்பாயின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்துள்ளதாகவும்,அவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் நேற்று அறிக்கை வெளியிட்டது.
பின்னர், இதனைத் தொடர்ந்து,பிரதமர் நரேந்திர மோடி,உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,குடியரசு துணை தலைவர் வெங்கையாநாயுடு உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மருத்துவமனையில் சென்று அவரை சந்தித்தனர்.
இந்நிலையில்,வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்ததால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 36 நேரமாக தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று மாலை 5.05க்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.