August 3, 2018
தண்டோரா குழு
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வுத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு விவகாரத்தில் முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டாளர்,பேராசிரியர் உமா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு நடத்திய தோ்வுகளில் தோ்ச்சி பெறாத மற்றும் மதிப்பெண் குறைவாக பெற்ற மாணவா்களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு தோ்ச்சி பெற வைத்ததாகவும்,மதிப்பெண்கள் அதிகம் வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதில் 24 மதிப்பெண் எடுத்த மாணவருக்கு மறுமதிப்பீட்டில் 94 மதிப்பெண் தரப்பட்டு இருப்பதாலும்,மறுமதிப்பீட்டில் 16,636 மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றது குறித்தும் விசாரணை நடைபெறுகிறது.இதனைத் தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனையடுத்து அண்ணா பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா,திண்டிவனத்தில் உள்ள அண்ணா பல்கலையின் உறுப்பு கல்லுாரி முதல்வர் விஜயகுமார் உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் தோ்வுத்துறை அதிகாரியும்,பல்கலைக்கழக பேராசிரியையுமான உமாவை பணியிடை நீக்கம் செய்து அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.மேலும்,விடைத்தாள் மறுமதிப்பீடு முறைக்கேடு விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து திண்டிவனம் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரியின் முதல்வர் பொறுப்பில் இருந்து விஜயகுமார் நீக்கம் செய்யப்பட்டார்.