August 9, 2018
தண்டோரா குழு
கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இடுக்கி அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.இதனால்,கேரளாவின் இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்குப் பிறகு திறந்து விடப்பட்டுள்ளது.
கேரளாவில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது.இதனால் அம்மாநிலத்தின் ஏரிகள்,அணைகள் உள்ளிட்டவை நிரம்பி வழிகின்றன. இதனொரு பகுதியாக,இடுக்கி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
கர்நாடகாவில் உள்ள குறவன்,குறத்தி என்ற இரு மலைகளுக்கிடையே ஓடிய பெரியாற்றைத் தடுத்து 170 மீட்டர் உயரமும்,366 மீட்டர் நீளமும் கொண்ட இடுக்கி அணை கட்டப்பட்டது. அணையின் மொத்த கொள்ளளவு 2,403 அடியாக உள்ள நிலையில்,கனமழையால் தற்போது அணையின் நீர்மட்டம் 2398.98 அடியை எட்டியுள்ளது.இதனால்,26 ஆண்டுகளுக்கு பின் தற்போது இடுக்கி அணை திறக்கப்பட்டுள்ளது.இதற்கு முன் 1981 மற்றும் 1992ம் ஆண்டுகளில் இடுக்கி அணை திறக்கப்பட்டது.
இதுகுறித்து கேரள அரசு வெளியிட்ட அறிக்கையில்,
அணையின் மொத்த கொள்ளளவான 2,403 அடியில் 2,398 அடியைத் தாண்டி நீர் தேங்கியிருப்பதாகவும்,இதன் காரணமாகவே அணை திறக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடுக்கி அணையை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு,பாதுகாப்பான இடங்களுக்கு அவர்களை வெளியேற்றும் பணியும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.