August 18, 2018
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது.100ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத கனமழையால், பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.கனமழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 324 உயிரிழந்துள்ளனர்.2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.வெள்ளத்தால், ரூ.19,512 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் கேரள மக்களுக்காக பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். இந்நிலையில், மலையாள நடிகர் நிவின் பாலி உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “கடவுளின் தேசம் எனப்படும் கேரளாவில் பிறந்தவன் என்பதிலும், அந்தக் கேரளா, இந்தியா என்கிற மாபெரும் தேசத்தின் ஒரு பகுதி என்பதிலும் குழந்தைப் பருவத்தில் இருந்தே பெருமைப்பட்டுக் கொண்டிருந்தேன்; என்றும் பெருமைப்பட்டுக் கொண்டிருப்பேன்.ஆனால், அந்த அழகிய கேரளா இன்று வெள்ளத்தாலும் நிலச்சரிவாலும் கடுமையான பாதிப்பில் இருக்கிறது. பல நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். எண்ணற்ற மக்கள் தங்கள் உடைமையை இழந்து, வீடின்றி, உணவின்றி, அடிப்படை வசதிகள் இன்றித் தவித்து வருகின்றனர்.
என் மாநில மக்கள் நிலைமை, என் மனதைப் பிசைகிறது. இந்த நேரத்திலும் நம்பிக்கைக் கீற்றாய் என் மனதில் ஒளி பாய்ச்சுவது, என் தேசத்தின் ஒற்றுமை தான். ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற தத்துவத்தில் நம்பிக்கை உள்ள என் தேசத்து மக்கள், என் மாநிலத்தையும், மாநில மக்களையுடம் கைவிட மாட்டார்கள் என நம்புகிறேன்.இந்த வரலாறு காணாதா வீழ்ச்சியில் இருந்து வீறுகொண்டு எழுந்து, மீண்டும் ராஜநடை போடும் கேரளா என்பதில் ஐயமே இல்லை. ஆனால், உடனடியான தேவைகள் அவசியம் என்பதால்தான் இந்தக் கோரிக்கை. உங்களால் முடிந்த அளவுக்கு அத்தியாவசியப் பொருட்களை உடனடியாகக் கேரளாவுக்கு அனுப்புங்கள்.