October 12, 2017 தண்டோரா குழு
சிறுமி ஆருஷி தல்வார் கொலை வழக்கில் பெற்றோரை விடுதலை செய்து அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறுமி ஆருஷி கொலை வழக்கில் பெற்றோருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை அலகாபாத் உயர்நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது.
கடந்த 2008-ம் ஆண்டு டெல்லியை அடுத்துள்ள நொய்டா நகரில்,ராஜேஷ் – நூபுர் தல்வார் ஆகியோரின் மகள் 14 வயது ஆருஷியும், வேலைக்காரர் ஹேம்ராஜும் (45) மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.இச்சம்பவம் தொடர்பாக நடந்த விசாரணையில், அவர்கள் இருவருக்கும் இடையே தகாத உறவு இருந்ததாகக் கருதி, ஆருஷியின் பெற்றோரான ராஜேஷ் தல்வார் மற்றும் நுபுர் தல்வார் இருவரும் அவர்களை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டனர்.
இதனையடுத்து நடந்த சிபிஐ விசாரணையில், இந்த கொலையை தந்தை ராஜேஷ் தல்வார், தாய் நுபுர் தல்வார் செய்தனர் என்று சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் கடந்த 2013ம் ஆண்டு, அவர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது.
இந்நிலையில் இந்த தண்டனையை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ராஜேஷ் – நூபுர் தல்வார் மேல்முறையீடு செய்தனர்.இந்த மேல்முறையீடு வழக்கில் அனைத்து சாட்சியங்களும் விசாரிக்கப்பட்ட நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், இந்த வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் ராஜேஷ் மற்றும் நுபுர் தல்வார் ஆகியோர் நிரபராதிகள் எனவும், அவர்கள் கொலை செய்யவில்லை எனக்கூறி, வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டனர்.