December 26, 2020
தண்டோரா குழு
நோய்த்தொற்று காலத்தில் உடல்நலத்தை மட்டுமல்லாமல் மனநலத்தையும் காக்க உதவிய யோகா, உலகுக்கு இந்தியா அளித்த கொடையாகும் என்று மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் ஸ்ரீபத் ஒய் நாயக் பாராட்டு தெரிவித்தார். கொரோனா பரவல் காலத்தில் மேற்கொண்ட முயற்சிகளுக்காகவும், மக்கள் சமூகத்துக்கு 102 ஆண்டுகளாகச் சேவையாற்றி வருவதற்காகவும், மும்பையில் செயல்பட்டு வரும் த யோகா இன்ஸ்டிடியூட் நிறுவனத்தை பாராட்டினார் மத்திய அமைச்சர்.
யோகா இன்ஸ்டிடியூட்டின் 102 ஆண்டு கால சேவையை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட மெய்நிகர் சந்திப்பில் தலைமை விருந்தினராக மத்திய அமைச்சர் நாயக் கலந்துகொண்டார். யோகா இன்ஸ்டியூட் வெளியிடும் தியான செயலியான நிஸ்பந்தா அறிமுகப்படுத்திப் பேசிய அமைச்சர், அக்கல்வி நிறுவனம் கோவிட்டுக்கு எதிராக மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டினார்.
மத்திய அமைச்சர் நாயக் பேசுகையில்,
102-வது ஆண்டை நிறைவு செய்யும் இந்த யோகா இன்ஸ்டிடியூட்டை சார்ந்த ஒட்டுமொத்தக் குழுவினரையும் பாராட்டுகிறேன். உலகிலுள்ள மக்களுக்குச் சிறப்பான சேவையை வழங்கியிருக்கிறீர்கள். உங்களது அர்ப்பணிப்பும் நேர்மையும் உழைப்பும் யோகாவின் மதிப்புமிக்க இந்திய மரபுகளைக் காக்கிறது; ஒவ்வொரு நாளும் உலகிலுள்ள மில்லியன்கணக்கான மக்களின் வாழ்வை மாற்றுகிறது. நீங்கள், உலக அமைதிக்கான பங்களிப்பாளர்கள். யோகா என்பது உலகுக்கான இந்தியாவின் பரிசு. அதனை மக்களுக்குக் கவனமாக வழங்கும் அழகான பணியை மேற்கொள்கிறது இந்த யோகா இன்ஸ்டிடியூட் என்று தெரிவித்தார்.
கோவிட் நோய்த்தொற்றினால் ஏற்பட்டுள்ள கடினமான காலகட்டம் குறித்தும், அதற்கு எதிராக யோகா இன்ஸ்டிடியூட் மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்தும் அமைச்சர் நாயக் பேசுகையில், யோகாவின் உண்மையான மதிப்பை மக்கள் இப்போதுதான் கற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கின்றனர். மக்களின் உடல்நலம், நோய் எதிர்ப்புத்திறன் மட்டுமல்லாமல் மன நலம் மற்றும் உணர்வு சமநிலையையும் காக்க யோகா உதவுகிறது. அன்னம் பிரம்மா இயக்கத்தின் மூலமாக, கோவிட்டுக்கு எதிராகக் களத்தில் நிற்கும் பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கி வருவது முதல் பல உயிர்களைச் சென்றடைவது வரை தனது பணிகளுக்கு அப்பாற்பட்டு பல்வேறுவகையில் செயலாற்றியது யோகா இன்ஸ்டிடியூட் என்று தெரிவித்தார்.
விரைவில் அறிமுகமாகவிருக்கும் நிஸ்பந்தா செயலி குறித்து பேசுகையில், இந்த தியான செயலிக்காகத்தான் உலகம் காத்திருக்கிறது. இந்த செயலியானது, உங்களது உள்ளங்கையில் தியானத்தை தவழச் செய்யும். இந்த உலகம் தியானம் செய்யும் முறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டதோடு, உடல்நலத்தை 360 டிகிரியிலும் அணுகும் வகையில் நெருக்கமானதாகவும் அமையும் என்று தெரிவித்தார்.
இது பற்றி யோகா இன்ஸ்டியூட்டின் இயக்குனர் டாக்டர் ஹன்சா ஜே யோகேந்திரா பேசுகையில்,
சமூகம், தேசம், உலகத்துக்காகச் சேவையாற்றி 102 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது யோகா இன்ஸ்டிடியூட். இதனைப் பெருமைப்படுத்துவதற்காகக் கொண்டாடப்படும் இந்த விழாவில் கலந்துகொண்ட மரியாதைக்குரிய மத்திய அமைச்சர் திரு ஸ்ரீபத் ஒய் நாயக் அவர்களுக்கும், இதர மதிப்புமிக்க விருந்தினர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
வீட்டில் இருந்தவாறே யோகா செய்ய வைக்கும் எங்களது சேவையில், கோவிட்டுக்கு எதிரான நிவாரணத்தையும் உதவியையும் அளிக்கும் வகையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டோம். இந்தியா மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் வீட்டில் இருந்தவாறே யோகா செய்யும் வகையிலான முயற்சிகளில் தனது அர்ப்பணிப்பைச் செலுத்தி வருகிறது யோகா இன்ஸ்டிடியூட். 102 ஆண்டுகளைக் கடந்த எங்களது பயணத்தினால் மக்களின் வாழ்வு மாற்றம் கண்டதற்குக் காரணம், யோகா இன்ஸ்டியூட் நிறுவனர் யோகா குரு திரு யோகேந்திரா மற்றும் மூன்று தலைமுறை யோகிகளின் முயற்சிகள் மற்றும் லட்சியங்களும், இக்குடும்பத்தில் நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து வரும் ஆயிரக்கணக்கான மக்களும் மட்டுமே.
இன்று, நாங்கள் 103-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறோம். இந்த நாளில், எங்களது நிஸ்பந்தா தியான செயலியை அறிமுகப்படுத்துகிறோம். யோகா குரு யோகேந்திராவின் நோக்கத்தை எடுத்துச் செல்லும் வகையில், இன்னும் நூறாண்டுகளுக்கும் அதற்குப் பின்பும் வீட்டில் இருப்பவர்கள் யோகாவின் மூலமாகக் கிடைக்கும் மாபெரும் பலன்களை அடைந்திடும் வகையில் எங்களது சேவை தொடரும் என்று தெரிவித்தார்.