December 12, 2020
தண்டோரா குழு
பழங்குடியின மக்களுக்கு உதவும் வகையில், வேலை வாய்ப்பு, வாழ்வாதார மேம்பாட்டிற்காக உருவாக்கப்பட்டுள்ள பழங்குடி மக்கள் வாழ்வாதார கூட்டமைப்பின் முதல் பொதுக்குழு கூட்டம் கோவையில் நடைபெற்றது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலுள்ள வனம் சார்ந்த மலைப் பகுதிகளில் வசித்து வரும் பழங்குடி மக்களின் நல்வாழ்விற்காகவும்,அவர்களது மேம்பாட்டிற்காகவும், உருவாக்கப்பட்ட பழங்குடி மக்கள் வாழ்வாதார கூட்டமைப்பின் முதல் பொதுக்குழு கூட்டம் கோவை கவுண்டர் மில்ஸ் பகுதியில் உள்ள தனியார். மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக முனைவர் ஸ்ரீதரன் , டோனா , மாவட்ட பழங்குடி நல அலுவலர் பிரபாகரன் , மாவட்ட வன அதிகாரி வெங்கடேஷ், ஹோம் கார்ட்ஸ் கமாண்டர்கள் பாலாஜி ராஜு ,வித்யாஸ்ரீ தர்மராஜ் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் களப்பணியாளர்களுடன் செயல்பட்டு இந்த அமைப்பு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த நிலமற்ற ஏழை விவசாயப் பெருங்குடி மக்களுக்கு நில உரிமை பெற்றுத் தருவதில் முனைந்து செயல்பட்டு வந்துள்ளது . வன உரிமைச் சட்டம் 2006 ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட பிறகு , பழங்குடி மக்களுக்கு வனத்தில் நில உரிமை பெற்றுத் தருவதிலும் , இயற்கை விவசாய முறைகளில் அதிகமான உற்பத்திக்கான பயிற்சிகளை கொடுப்பதிலும் , பேரிடர் சம்பந்தமான விழிப்புணர்வு கொடுப்பதிலும் , பழங்குடி மக்களை மாநில அளவில் கட்டமைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது.குறிப்பாக பழங்குடி மக்கள் விவசாய பூமியில் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கும் , வனத்திலிருந்து திரட்டி வரும் பொருட்களுக்கும் , அதிக வருவாய் தரக்கூடிய சந்தை சங்கிலியை ஏற்படுத்திக் கொடுப்பதில் இப்போது முனைப்பாக உள்ளது.
இதன் தொடர்ச்சியாக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இரண்டு நாட்கள் பழங்குடி மக்களின் இயற்கையான விளைபொருட்கள் கண்காட்சி நடைபெற உள்ளது.இங்கு நல்ல மிளகு,போன்ற பொருட்கள் காட்சிக்கும் , விற்பனைக்கும் வைக்கப்பட உள்ளது. மேலும் பழங்குடி மக்களின் கலை நிகழ்ச்சிகளும் நடை பெற உள்ளது.