May 9, 2018
தண்டோரா குழு
காலா படத்தில் அரசியல் இருக்கும் ஆனால் அரசியல் படம் இல்லை என காலா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.
கபாலி படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காலா’.இப்படம் வருகிற ஜூன் 7ம் தேதி வெளியாகவுள்ளது. நடிகர் தனுஷ் தயாரிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார்
அப்போது பேசிய நடிகர் ரஜினிகாந்த்,
இந்த விழாவை பார்க்கும் போது ஆடியோ வெளியீட்டு விழா மாதிரி தெரியவில்லை படத்தின் வெற்றி விழா போல் தெரிகிறது. நான் கடைசியாக சிவாஜி படத்தின் வெற்றிவிழாவை கொண்டாடினேன். அதில் கலைஞர் கலந்து கொண்டு பேசினார்.அந்த குரலை மறக்க முடியாது. 75 ஆண்டுகளாக தமிழகத்தில் ஒலித்த திமுக தலைவர் கருணாநிதியின் குரல் மீண்டும் ஒலிக்க வேண்டும். அவரின் குரலை மீண்டும் கேட்க வேண்டுமென கோடிக்கணக்கான மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்; அவர்களில் நானும் ஒருவன்.என் வாழ்க்கையின் கனவுகளில் ஒன்று நதி இணைப்பு, தென்னிந்திய நதிகளை இணைத்துவிட்டு நான் இறந்துவிட்டால் கூட போதும். புத்திசாலிகளிடம் மட்டுமே ஆலோசனைகளை கேட்க வேண்டும் ; அதிபுத்திசாலிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். யார் என்ன சொன்னலும் என் ரூட்டில் நான் போய்கொண்டே இருப்பேன். 40 வருடங்களாக ரஜினி கதை முடிந்துவிட்டது என கூறி வருகிறார்கள், ஆண்டவனும், மக்களும் ஓட வைக்கிறார்கள் ஓடுகிறேன். வாழ்க்கையிலும் சரி, திரைப்படத்திலும் சரி நல்லவனாக இருக்கலாம். ஆனால் மிக நல்லவனாக இருக்க கூடாது. தாய் , தந்தையை மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டால் போதும் உங்கள் வாழ்க்கையே மகிழ்ச்சியாக இருக்கும். காலா படத்தில் அரசியல் இருக்கும் ஆனால் அரசியல் படம் இல்லை.நேரம் வரும் போது தமிழகத்திற்கு நல்ல நேரம் பிறக்கும், நல்ல காலம் பிறக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்