July 10, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி பகுதிகளில் 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 2ம் தவணை தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்றது. இதனை மாநகராட்சி கமிஷனர்ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாநகராட்சி கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. கோவை மாநகராட்சி பகுதிகளில் மார்ச் 31ம் தேதிக்கு முன் முதல் தவணை கோவிட் ஷீல்டு தடுப்பூசி செலுத்தி கொண்ட 65 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டது.
கோவை மாநகராட்சி எஸ்.ஆர்.பி. அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, கணபதி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தண்ணீர் பந்தல் காடு பகுதியிலுள்ள ராமன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த பணிகளை மாநகராட்சி கமிஷனர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கிருந்த பொதுமக்களிடம் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கொரோனா தொற்று இல்லாத மாநகராட்சியாக திகழ முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி காது கேளாதோர் உயர்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட அவர் மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்ப்பிக்கும் முறைகள் குறித்தும், பள்ளியின் செயல்பாடுகள், கட்டமைப்பு வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது நகர்நல அலுவலர் ராஜா, உதவி நகர்நல அலுவலர் வசந்த் திவாகர் மற்றும் மண்டல உதவி கமிஷனர்கள் உடனிருந்தனர்.