January 18, 2022
தண்டோரா குழு
கோவை மாநகராட்சிக்குட்பட்ட இடங்களில் வள்ளலார் தினமான இன்று தமிழக அரசின் உத்தரவின் படி ஆடு, மாடு மற்றும் கோழிகளை வதை செய்வதும், இறைச்சிகளை விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டிருந்தது.
மேலும் கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி கடைகளை மூடும்படி முன்னதாக மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதே போல கோவை மாநகராட்சியால் செயல்படுத்தப்பட்டு வரும் உக்கடம் ஆடு அறுவைமனை, சிங்காநல்லூர் ஆடு அறுவைமனை, கணபதி மாடு அறுவைமனை, போத்தனூர் செட்டிபாளையம் மாடு அறுவைமனை, துடியலூர் ஆடு அறுவைமனை மற்றும் மாநகராட்சியின் கீழ் இயங்கும் மாநகராட்சி இறைச்சிக் கடைகள் செயல்படாது எனவும் அவர் கூறியிருந்தார்.
இதனை அடுத்து மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வ.உ.சி உயிரியல் பூங்கா இயக்குநர் செந்தில்நாதன் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து வ.உ.சி உயிரியல் பூங்கா இயக்குநர் செந்தில்நாதன் கூறுகையில், ‘‘ உத்தரவை மீறி செயல்பட்ட இறைச்சி கடைகளில் இருந்து 60 கிலோ சிக்கன், 5 கிலோ மட்டன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரூ.6 ஆயிரம் வரை இறைச்சி கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது,’’ என்றார்.