January 24, 2018
தண்டோரா குழு
ஜம்மு காஷ்மீரில் உள்ள டால் ஏரியை 5 வயது சிறுமி தனது தந்தையுடன் சுத்தம் செய்யும் முயற்சி பலரின் பாராட்டை பெற்று தந்துள்ளது.
ஜம்மு கஷ்மீர் மாநிலம் இயற்கை அழகிற்கு பெயர் போனது. ஒவ்வொரு ஆண்டும், காஷ்மீர் பகுதியில் காணப்படும் கண்கவர் இயற்கை அழகை கண்டு ரசிக்க, உலகின் பல பகுதியில் இருந்து மக்கள் வருகின்றனர். காஷ்மீரை பூமியின் சொர்க்கம் என்று அழைப்பதும் உண்டு. அங்கு காணப்படும் இயற்கை அழகில் டால் எரியும் ஒன்று.
காஷ்மீரில் உள்ள டால் ஏரியை “Kashmir’s Jewel” என்று அழைப்பதும் உண்டு. தற்போது அந்த ஏரி அதிக மாசு படிந்து, தன் அழகை இழந்து உள்ளது.டால் ஏரியை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் கவர்கள், பிஸ்கட் கவர்கள், காலியான தண்ணீர் பாட்டில்கள் ஆகியவற்றை டால் ஏரியில் வீசுவதால், அதனுடைய அழகு கெட்டு போகிறது.
இதையடுத்து,காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த 5 வயது ஜன்னத் என்னும் சிறுமி தனது தந்தையின் உதவியுடன் அந்த ஏரியை சுத்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறாள். அவளுடைய முயற்சிக்கு பலர் தங்கள் ஆதரவையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
சிறுமி ஜன்னத்தின் முயற்சியை குறித்து கேள்விப்பட்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி,
“சிறுமியின் முயற்சி குறித்து மிகவும் மகிழ்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தேன். “தூய்மை இந்தியா” திட்டத்திற்கு அவளுடைய பங்கு தெளிவாக காணப்படுகிறது என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.