June 5, 2018
தண்டோரா குழு
உதகையில் பிளாஸ்டிக் உபயோகத்தை இங்கு வரும் சுற்றுலா பயணிகளும் தவிர்க்க வேண்டும் என நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலக சுற்றுச்சூழல் நாள் ஐக்கிய நாடுகள் சபையால் ஆண்டுதோறும் ஜூன் 5ம் தேதி கொண்டாடப்படுகிறது.இது ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்சபையால் 1972 ஆம் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.இந்நாளில் உலகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் சார்பாக சுற்று சூழல் விழிப்புணர்வு குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் உலக சுற்று சூழல் தினமான இன்று நீலகிரி மாவட்டம் உதகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வன துறை சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.இதில் முதல் நிகழ்ச்சியாக நீலகிரி மாவட்ட வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக ஸ்டீபன் ஆலய வளாகத்தில் மர கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னொசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகர் விவேக் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஆலைய வளாகத்தில் மர கன்றுகளை நட்டார்.
இதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய நடிகர் விவேக்,
“நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் தடையை பற்றி உள்ளூர் மக்களிடையே மிகச்சிறப்பான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதனால் உள்ளூர் மக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை பெரும்பாலும் தவிர்த்து வருகின்றனர்.இது என்னைப்போன்ற சுற்று சூழல் ஆர்வலர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஆனால் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க மறந்து விடுகின்றனர்.இதனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களில் மாசு ஏற்பட்டு வருகிறது.எனவே இங்கு வரும் சுற்றுலா பயணிகளும் நீலகிரியை காக்கும் வண்ணம் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என கேட்டு கொண்டார்.மேலும்,பள்ளி குழந்தைகள், தன்னார்வ தொண்டு அமைப்பினருக்கு சுற்று சூழல் குறித்த உறுதி மொழி ஏற்க வைத்தார்”.