July 24, 2018
தண்டோரா குழு
திருவண்ணாமலை அருகே 4 வயது சிறுமி கடத்திக் கொல்லப்பட்ட வழக்கில், இளைஞருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
மேல்பாலானந்தலைச் சேர்ந்த மணிகண்டன், பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் அதே பகுதியை சேர்ந்த பரமசிவம் என்பவரின் யூகேஜி பயின்று வந்த மகளை பள்ளியிலிருந்து கடத்தி, கிணற்றில் வீசி கொன்றதாக 2013-ஆம் ஆண்டு கைதானார். இவ்வழக்கைவிசாரித்த திருவண்ணாமலை மாவட்ட மகளிர் நீதிமன்றம், மணிகண்டனுக்கு தூக்கு தண்டனை விதித்து கடந்த ஜனவரி 31 ஆம் தேதி தீர்ப்பளித்தது.
இதையடுத்து,தண்டனையை ரத்து செய்ய கோரி மணிகண்டன் சார்பிலும் தண்டனையை உறுதி செய்யுமாறு மகளிர் நீதிமன்றம் சார்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.விமலா, ரமாதிலகம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று கூறி, மணிகண்டனின் தூக்கு தண்டனையை நீதிபதிகள் ரத்து செய்தனர். மேலும்,நீதிமன்றம் இவ்வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது.