• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கரடி சாட்சியுடன் திருமணம் செய்த ரஷ்ய ஜோடி

November 3, 2016 தண்டோரா குழு

“பூஜை வேளையில் கரடி வந்துவிட்டது” என்று ஒரு பழமொழி உண்டு.பூஜை செய்யும் நேரத்தில் கரடி வந்துவிட்டால், பூஜையில் இருக்கும் புரோகிதர் பாடு சங்கடம் என்பதைப் போல் பழமொழி அமைந்திருக்கிறது.

ஆனால், ரஷ்யாவில் ஒரு கரடியே புரோகிதரைப் போல் திருமணத்தை நடத்தியிருக்கிறது. இந்தக் காட்சி கொண்ட புகைப்படம் சமூக வலை தளங்களில் உலவி வருகிறது.

ஆனால், கரடியே திருமணத்தை நடத்தி வைக்கவில்லை. தலைநகர் மாஸ்கோவைச் சேர்ந்த டெனிஸ் (30), நிலியா (30) ஜோடியின் திருமணத்திற்கு அந்தக் கரடியைச் சாட்சியாக வைத்து அவர்கள் திருமணம் செய்துகொண்டனர்.

ஆகாயத்தில் பறந்து திருமணம் செய்வது, கடலுக்கு அடியில் திருமணம் செய்வது என புதுப்புது வழிகளில் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் ரஷிய ஜோடி ஒன்று தற்போது இணைந்துள்ளது.

ரஷிய ஜோடியான டெனிஸும், நிலியாவும் வித்தியாசமாகத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். அதன்படி ஸ்டீபன் என்ற கரடியைத் தங்கள் திருமணத்திற்கு அழைத்து அதன் முன்னிலையில் இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

சுற்றிலும் மரங்கள், புல்வெளி, பழங்கள் என இயற்கையான சூழலுக்கு நடுவில் பூங்கொத்துகளைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட தோரணத்தின் நடுவில் இந்தத் திருமணம் ஜாம் ஜாமென்று நிறைவேறியிருக்கிறது.

திருமணத்தை “நடத்தி வைத்த” புரோகிதரைப் போல் அங்கு இருந்த ஸ்டீபன் பிறந்த மூன்று மாதங்களிலேயே தாயை இழந்துவிட்டது. காட்டில் தவித்தபடி இருந்த அந்தக் கரடியை ஸ்வெட்லானா – யூரி என்ற தம்பதியர் தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர்.

கரடி தலைமையில் நடந்த திருமணத்தைப் பற்றி டெனிஸ், “ஸ்டீபன் ரொம்ப அன்பான கரடி. ஆனால், அதன் உயரமான தோற்றமும், எதிர்பாராத குணமும் எங்களுக்கு சிறிது பயமாகவே இருந்தது. ஆனாலும், எங்களுடைய கனவு நனவாகிவிட்டது. இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார் உற்சாகமாக.

“ஸ்டீபனோடு புகைப்படம் எடுப்பது ஒரு அற்புதமான அனுபவம் கூட. ஒரு உண்மையான கரடியைக் கட்டி அணைப்பதை தரும் உணர்வு எதற்கும் ஒப்பிட முடியாது. இந்த நாள் எங்களுக்கு மறக்க முடியாத ஒரு நாளாகும்” என்று இருவரும் உணர்ச்சி பொங்கக் கூறினர்.

இவர்களுடைய திருமண விழாவின் புகைப்படங்களை எடுத்தவர் ரஷ்ய புகைப்படக் கலைஞர் ஒல்கா பரண்ட்செவா ஆவார்.

மேலும் படிக்க