May 15, 2021
தண்டோரா குழு
கொரோனா பேரிடர் காலத்தில் மக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கி கிடப்பதால் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். தமிழக அரசு இந்த பேரிடர் காலத்தில் மக்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. அதே போல் இரண்டு மாத காலங்களுக்கு குடிநீர் மற்றும் மின் கட்டனங்களை தள்ளுபடி செய்து தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் சு. பழனிசாமி கூறியதாவது:
தமிழகம் முழுவதும் கொரோனா 2 வது அலை தீவிரமாக பரவி வருகிறது. தமிழக அரசு போர்கால அடிப்படையில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்தி வருகிறது. கொரோனா பேரிடர் காலத்தில் தங்கள் உயிரை பணயம் வைத்து பணிபுரிந்து வரும் மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், சுகாதாரத்துறையினர், செய்தியாளர்கள் என பலரையும் முன்கள பணியாளர்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதே போல் இந்த கொரோனா பேரிடர் காலத்திலும் தங்கள் உயிரை பணயம் வைத்து உணவு உற்பத்தி செய்து அதை தடைபடாமல் மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கும் விவசாயிகளையும் முன்கள பணியாளர்களாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவிக்க வேண்டும். மேலும் விவசாயிகளுக்கு கொரோனா தடுப்பூசி போட முன்னுரிமை அளிக்க வேண்டும்.
கோவையில் பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளில் விவசாயிகள், அவரது குடும்பத்தினர் மற்றும் மக்கள் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சில தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளிடம் முன் பணம் பெற்று கொண்டு அதன் பின் ஆக்சிஜன் படுக்கை வசதி இல்லை வேறு மருத்துமனைக்கு செல்லுங்கள் என கூறுகின்றனர். இது போன்றவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த கொரோனா பேரிடர் காலத்தில் மக்கள் நலன் காக்க தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறார். அதே போல் தமிழகத்தில் உள்ள வீடுகளில் குடிநீர், மின் கட்டணங்களை இரண்டு மாத காலங்களுக்கு தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு பழனிசாமி கூறினார்.