January 5, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமையல் எரிவாயு குறைகள் தொடர்பான கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வழங்கல் அலுவலர் குமரேசன் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு சார்பில் லோகு பேசியதாவது:
சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யும் பொழுது, ஸ்வைப்பிங் மெஷின் மற்றும் கூகுள் பே ஆகியவைகளை எரிவாயு சிலிண்டர் விநியோகிக்கும் பணியாளர்கள் கொண்டு வரவேண்டும். சிலிண்டர் விநியோகிக்கும் பொழுது செல்போன் மூலம் ஒ.டி.பி எண் காண்பித்தால் மட்டுமே சிலிண்டர் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்கு மாற்று ஏற்பாடாக ஆதார் அட்டை காண்பித்தால் சிலிண்டர் விநியோகம் செய்ய வேண்டும். மேலும் கிராமப்புற பகுதிகளில் பதிவு செய்த 48 மணி நேரத்தில் சிலிண்டர் விநியோகம் செய்ய வேண்டும்.சில கிராமப்புற பகுதிகளில் ஒரு மாதம் கழித்து சிலிண்டர் விநியோகம் செய்யப்படுவதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு பதிலளித்த எண்ணெய் நிறுவன அதிகாரிகள்,சிலிண்டர் விநியோகிக்கும் போது பொதுமக்கள் கூகுள் பே, யுபிஐ, போன்பே ஆன்லைன் மூலமாக சிலிண்டருக்கான கட்டணம் செலுத்தலாம்.அதுபோல செல்போனில் குறுஞ்செய்தி வராவிட்டாலும் வீட்டில் உள்ளவர்கள் ஆதார் அட்டையை காட்டினால் சிலிண்டர் டெலிவரி செய்யப்படும் என்று தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில் பறக்கும் படை தாசில்தார் சிவகுமார், ஆயில் நிறுவன அலுவலர்கள், சமையல் எரிவாயு விநியோகஸ்தர்கள், நுகர்வோர் அமைப்புகள் கலந்து கொண்டனர்.