July 24, 2025
தண்டோரா குழு
கோவை ஆவாரம்பாளையத்தில் ‘எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளை’ நடத்தும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் மெரிடியன் அமைப்பு இணைந்து, போன் சார்க்கோமா எனும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை மக்கள் பயனடையும் வகையில் ‘ப்ளாசம்’ என்ற சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தினர். இந்த திட்டம் ஆட்டிடியூட் அறக்கட்டளை மற்றும் கார்டன் ப்ளூ பிராபர்டீஸ் நிறுவனத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் தொடக்க விழா ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் வியாழன் (24.7.25) நடைபெற்றது.
எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர். சுந்தர்,டாக்டர் பி.குகன்,இயக்குநர்,ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம், டாக்டர் ராஜகோபால், மருத்துவ இயக்குநர்; டாக்டர் அழகப்பன், மருத்துவ கண்காணிப்பாளர்,ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை; சி.வி.ராம்குமார், தலைமை செயல் அதிகாரி;டி.மகேஷ் குமார்,தலைமை நிர்வாக அதிகாரி, எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளை; டாக்டர் பார்கவி,புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்,ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம்; மற்றும் ரோட்டரி உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்தார்.
விழாவில் வரவேற்புரையாற்றிய பின்னர் டாக்டர் பி.குகன் பேசுகையில்,
போன் சார்க்கோமா என்பது எலும்பு திசுகளில் ஆரம்பிக்கும் ஒரு வகை புற்றுநோய் என்றார். இதற்கு கடந்த காலங்களில், குறிப்பாக 1950களில், ஒரே தீர்வாக பாதிப்படைந்த கால்களை அகற்றுவதே பார்க்கப்பட்டது.இந்த புற்றுநோய் பெரும்பாலும் பதின் பருவத்தில் உள்ள சிறுவர்கள் மற்றும் இளைய வயதினரை பாதிப்பதால், அறுவை சிகிச்சை செய்து உயிரை காப்பாற்றினாலும், பாதிக்கப்பட்ட கால் பகுதியை அகற்றுவதால் அவர்களின் வாழ்க்கை தரம் பாதிக்கப்படுவந்தது.
இன்று மருத்துவ துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் காரணமாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எலும்பு பகுதியை அகற்றி ‘லிம்ப் சால்வேஜ் சர்ஜரி’ செய்யப்படுகிறது. பின்னர் அந்த இடத்தில் உலோகம் வைத்து மீண்டும் இயல்பான வாழ்க்கை வாழ வழிவகை செய்யப்படுகிறது. தமிழகத்தின் மேற்கு மண்டல மாவட்டங்களில் முதல் முறையாக 2008ல் ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் வெற்றிகரமாக செய்து முடித்தது.
இந்த சிகிச்சைக்கான செலவு என்பது சற்று அதிகம் என்பதால் இந்நோயால் பாதிக்கப்படும் ஏழை மக்கள் இந்த சிகிச்சையால் பயனடைய முடியாத நிலையில் இருந்து வருகின்றனர். இதற்கு தீர்வு வழங்கும் விதத்தில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் மெரிடியன் இணைந்து, ‘ப்ளாசம்’ திட்டத்தை துவங்கியுள்ளோம். இதில் சிகிச்சை, மருந்துகளுக்கான செலவுகளை நாங்கள் இணைந்து ஏற்போம்.
இந்த திட்டத்தின் துவக்கத்திற்கு முன்பாகவே, ரோட்டரி மற்றும் பிற அமைப்புகளின் ஆதரவுடன், 5 நோயாளிகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது, என்றார் டாக்டர் குகன்.
எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் தனது தலைமை உரையில்,
‘ப்ளாசம்’ என்ற திட்டத்தை ரோட்டரி அமைப்புடன் இணைந்து ஆரம்பிப்பதில் எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளை மிகுந்த மகிழ்ச்சியடைகிறது என்று கூறினார்.
தங்களின் பொருளாதார சூழலால் இவ்வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதற்கான சிகிச்சை எடுக்காமல் போவதை தடுத்து அவர்களுக்கு ஒரு புது நம்பிக்கையை கொடுக்க ப்ளாசம் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் ரோட்டரியுடன் இணைந்து ஏழை மக்கள் பயனடையும் வகையில் பல திட்டங்களை துவங்கி இருக்கிறோம். ‘ப்ளாசம்’ திட்டம் என்பது எங்களுக்கு ஒரு முக்கியமான திட்டமாகும். ரோட்டரியுடன் நாங்கள் தொடங்கிய முந்தைய கூட்டுத் திட்டங்களைப் போலவே வெற்றிகரமாக இது இருக்கும், அவற்றை விட பெரியதாக இது இருக்கும். இதை நாங்கள் நிச்சயமாக முன்னெடுத்து செல்வோம் என கூறினார்.