October 28, 2021
தண்டோரா குழு
கோவை சுங்கம் பைபாஸ் ஸ்ரீ நகர் மற்றும் சிவராம் நகர் குடியிருப்பு பகுதியில் நீண்ட நாட்களாக தேங்கியுள்ள குப்பைகளை அகற்றாதாதால் நோய் தொற்று அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கோவை மாநகராட்சி 74 வது வார்டுக்கு உட்பட்ட சுங்கம் பைபாஸ் சாலை,ஸ்ரீ நகர்,சிவராம் நகர் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இங்கு போதிய அடிப்படை வசதி இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், துப்புரவு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாததால், ஆங்காங்கே சாலையில் குப்பை குவியலாக காட்சியளிக்கிறது.
இதனால், இப்பகுதி மக்கள் சுகாதார கேட்டில் தவித்து வருகின்றனர். குப்பைகள் தேங்கியுள்ளதால், அந்த வழியாக மக்கள் செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் சரிவர குப்பை அகற்றப்படாததால், அங்கு விஷ பூச்சிகள்,பாம்புகள் போன்றவற்றின் கூடாரமாக மாறி வருவதாக இப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து பல முறை மாநாகராட்சி அதிகாரிகளிடம் இது குறித்து புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை எனவும் புகார் நெரிவித்தள்ளனர்.