April 21, 2021
தண்டோரா குழு
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு சட்டை அணிந்து சமூக ஆர்வலர்கள் நடைபயிற்சி மேற்கொண்டனர்.
கோவையில் பல கோடி செலவில் சுமார்ட் சிட்டி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியின் மூலம் குளங்கள் அனைத்தும் சீரமைக்கப்பட்டு குளக்கரைகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு நடைபாதைகள், குழந்தைகள் விளையாடுவதற்கு விளையாட்டு பூங்காக்கள் போன்றவை அமைக்கப்பட்டு வருகின்றன.
கோவையில் உள்ள முக்கிய இடங்களான ஆர்.எஸ் புரம்,ரேஸ் கோர்ஸ் ஆகிய பகுதிகளும் சீரமைக்கப்பட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் காண்பதற்கு அழகாக இருந்தாலும் இயற்கைக்கு ஆபத்தை விளைவிக்கும் வண்ணம் அமைந்து வருகிறது என்று பல்வேறு சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக இதில் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் சுமார் 3 கிலோமீட்டருக்கு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது இதற்காக அந்த பகுதியில் இருந்த சாலையோர மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. இதற்கு சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் பெரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் சமூக ஆர்வலர்கள் இந்த ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 50க்கும் மேற்பட்டோர் கருப்புச்சட்டை அணிந்து ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடை பயிற்சி கொண்டனர்.இவர்களுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யத்தின் மகேந்திரன், காங்கிரஸ் கட்சியின் மயூரா ஜெயக்குமார் ஆகியோரும் இந்த நடைப் பயிற்சியில் கலந்து கொண்டனர். ஸ்மார்ட் சிட்டி பணிகள் என்ற பெயரில் இயற்கையை அளித்து வருவதாகவும் இதனால் காற்று மாசுபாடு ஏற்படுவதாகவும் பறவைகளின் இருப்பிடங்கள் அளிக்கப்படுவதாவும் அவர்கள் தெரிவித்தனர்.